உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உள்ளாட்சி அதிகாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு  தேவை; திட்ட பணி, கோரிக்கைகளுக்காக அலைக்கழிப்பால் அவதி

உள்ளாட்சி அதிகாரிகளுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு  தேவை; திட்ட பணி, கோரிக்கைகளுக்காக அலைக்கழிப்பால் அவதி

சித்தையன்கோட்டை: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி, நெடுஞ்சாலை, மின்வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பெரும்பாலான அதிகாரிகள் உரிய நேரத்தில் வருவதில்லை. அலட்சிய அதிகாரிகளால் நலத்திட்டங்களில் தொய்வு மட்டுமின்றி கோரிக்கை, புகார் மனுக்களுடன் வரும் மக்கள் வீண் அலைக்கழிப்பால் அதிருப்திக்கு உள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளின் கடைநிலை ஊழியர் முதல் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் வரை உரிய நேரத்தில் அலுவலகங்களுக்கு வருவதில்லை. உயர் அதிகாரிகளும், கலெக்டர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகம், வீடியோ கான்பரன்சிங், கலந்தாய்வு கூட்டம், வெளி மாவட்ட பயிற்சி போன்ற காரணங்களை கூறி அலுவலகம் வருவதை தவிர்ப்பது, கள ஆய்வை புறக்கணிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பல சேவைகள் ஆன்-லைன் மயமாக்கப்பட்டபோதும் அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு கோரிக்கைகள், திட்டப்பணி புகார் மனுக்களுடன் தினமும் பொதுமக்களின் வருகை வாடிக்கையாக விட்டது. பல நேரங்களில் உரிய அலுவலர், அதிகாரிகள் இருப்பதில்லை. வெகுநேரம் காத்திருந்தபோதும் தீர்வு கிடைக்காமல் அலைக்கழிப்பிற்கு உள்ளாகும் அவலநிலை தொடர்கிறது. தரம் குறைந்த கட்டமைப்புகள் அரசு திட்டங்கள் மீது அவப்பெயர் ஏற்படுத்துபவையாக மாறி வருகின்றன. நடைபெறாத பணிகளைக்கூறி முறைகேடுகளும் அரங்கேறுகின்றன. இச்சூழலில் அதிகாரிகளின் அலட்சியம், வீண் அலைக்கழிப்பு பிரச்சனைகளால் மக்களிடையே அதிருப்தி அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்க மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், வருவாய், மின் வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

கண்டு கொள்வதில்லை

பொது, கல்வி நிறுவன கட்டடங்கள், ரோடு, குடிநீர் வழங்கல், சுகாதாரம் சார்ந்த பணிகளுக்காக பல லட்சம் ரூபாய் செலவாகிறது. பணிகளில் உரிய தரம், அறிவிப்பு பலகை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் கூட பின்பற்றப்படுவது இல்லை. கண்காணிக்க வேண்டிய பொறியியல், தணிக்கை துறை அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. ஊரக வளர்ச்சி துறையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுக்கவும் முடிவதில்லை. அலுவல் நேரத்தில் பெரும்பாலான அதிகாரிகளை காண முடிவதில்லை. திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகம், செவ்வாய்க்கிழமை உதவி இயக்குனர் அலுவலகம் புதன், வியாழக்கிழமைகளில் வீடியோ கான்பரன்சிங் கூட்டம் என ஏதேனும் காரணத்தை கூறி குறித்த நேரத்திற்கு வருவதை தவிர்க்கின்றனர். இதை கருதி அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகை பதிவை ஏற்படுத்த வேண்டும். பி.கோபி , மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி செயலாளர், சித்தையன்கோட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ