உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம் ஏராளமாக குவிந்த பக்தர்களால் விண்ணை முட்டியது அரோஹரா கோஷம்

பழநி முருகன் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம் ஏராளமாக குவிந்த பக்தர்களால் விண்ணை முட்டியது அரோஹரா கோஷம்

பழநி:பழநி முருகன் கோயில் தைப்பூசவிழா கோலாகலமாக நடந்தது. ஏராளமாக குவிந்த பக்தர்களின் 'அரோஹரா' கோஷம் விண்ணை முட்டியது. பாதயாத்திரை பக்தர்கள் காவடி எடுத்தும், அலகுதித்தியப்படியும் ஆட்டம் பாட்டத்துடன் வலம் வந்தனர்.பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழா பெரியநாயகி அம்மன் கோயிலில் ஜன.,19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வலம்வர ஜன.,24ல் வள்ளி, தெய்வானை முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம், இரவு பக்தர்களின் 'அரோஹரா' கோஷத்துடன் வெள்ளி ரத வீதி உலா நடந்தது.

தேரோட்டம்

நேற்று காலை முருகன் கோயிலில் பக்தர்கள் விளக்கேற்றி சூரிய நமஸ்காரம் செய்து வழிபட்டனர். அதிகாலை தோளுக்கினியானில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருள தீர்த்தம் கொடுத்தல் நடந்தது. பின் பெரியநாயகி அம்மன் கோயில் தேரடியில் உள்ள தேரில் சுவாமி எழுந்தருள மாலை 4:35 மணிக்கு தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் வடம் பிடிக்ககோயில் யானை கஸ்துாரி தேரின் பின்னால் வந்தது. மாலை 6:05 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, சித்தநாதன் அண்ட் சன்ஸ் சிவனேசன், கந்த விலாஸ் செல்வகுமார், கண்பத் கிராண்ட் ஹரிஹர முத்து அய்யர், சரவண பொய்கை கந்த விலாஸ் பாஸ்கரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்தைப்பூச விழா துவங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களிலிருந்து முருக பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வரத் துவங்கினர். இவர்களோடு வெளிநாடு, வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் பழநிக்கு வந்தனர். நேற்று ஒரே நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில் பழநி நகரம் விழா கோலம் பூண்டிருந்தது.பல கி.மீ., பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் சண்முக நதி, இடும்பன் குளத்தில் நீராடி காவடி எடுத்தும், அலகு குத்தியப்படிம் அடிவாரம் கிரி வீதி பகுதிகளில் மேளதாளத்துடன் முருகபக்தி கோஷத்துடன் ஆடிப்பாடி வந்தனர். பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி தீர்த்த குடமும் எடுத்து வந்தனர்.

பூக்களால் ஜொலித்த பாரவேல் மண்டபம்

கிரிவீதி, சண்முக நதி பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. பழங்கள், இளநீரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு வழங்கினர். முருகன் கோயில் பாரவேல் மண்டபத்தில் பூக்களால் 'சரவணபவ' 'ஓம்' என்ற வாசகங்களுடன் மயில் வரைந்திருந்தனர். பாரவேல் மண்டபம் உட்பிரகாரம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது.திருஆவினன்குடி கோயிலிலிருந்து சன்னதி வீதி, பாத விநாயகர் கோயில், வடக்கு கிரி விதி, குடமுழுக்கு நினைவரங்கு மண்டபம் வழியே யானை பாதையடைந்து மலைக்கோயில் சென்றனர். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்புடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பக்தர்களை மலை கோயிலுக்கு அனுப்பினர். அங்கிருந்து படிப்பாதை வழியாக கீழே இறங்க அனுமதிக்கப்பட்டு பாத விநாயகர் கோயில், அய்யம்பள்ளி ரோடு வழியே பஸ் ஸ்டாண்ட் செல்ல போலீசார் அனுமதித்தனர். கூட்டத்தால் பக்தர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். சுகாதார துறை சார்பில் முருகன்கோயில், திருவீதி பழநியை சுற்றிய பகுதிகள் அனைத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. கிரிவீதி பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

சிறப்பு ரயில்

தைப்பூசத்தைக் காண வெளிநாட்டில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். இஸ்தான்புல் நாட்டைச் சேர்ந்த 20 பேர் குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். தெற்கு ரயில்வே சார்பில் நேற்று முதல் ஜன.,28 வரை கோவையிலிருந்து பழநி வழியாக திண்டுக்கல்லுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 12 பெட்டிகளுடன் வந்த ரயில் நேற்று காலை 9:20 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு காலை 11:39 க்கு பழநி, மதியம் 1:00 மணிக்கு திண்டுக்கல் வந்தது. மதியம் 2:00 மணிக்கு திண்டுக்கல்லிருந்து புறப்பட்டு பழநி வழியாக மாலை 5:30 மணிக்கு கோவை சென்றது. இது போல் மதுரையிலிருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !