உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  நெல் கொள்முதலை வைத்து அரசியல்; பா.ஜ., அ.தி.மு.க., மீது அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு

 நெல் கொள்முதலை வைத்து அரசியல்; பா.ஜ., அ.தி.மு.க., மீது அமைச்சர் சக்கரபாணி குற்றச்சாட்டு

திண்டுக்கல்: ''நெல்கொள்முதல் ஈரப்பதம், செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரங்களில் 'நெல்'ஐ வைத்து பா.ஜ., அ.தி.மு.க., அரசியல் செய்யப் பார்க்கின்றன,'' என, திண்டுக்கல்லில் தமிழக உணவுப்பொருள், வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி குற்றம்சாட்டினார். அவர் அளித்த பேட்டி: 29 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி டிச., 12ல் சென்னையில் நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் துவக்குகிறார். விடுபட்டவர்கள் தகுதியான ஆவணங்களை கோட்டாட்சியரிடம் சமர்ப்பித்து மகளிர் உரிமைத்தொகை பெறும் திட்டத்தில் சேரலாம். டெல்டா மாவட்டங்களில் அக்.1 முதல் குறுவை நெல் கொள்முதல் பணி நடக்கிறது. கலெக்டர்கள் பரிந்துரை அடிப்படையில் நெல்கொள்முதல் ஈரப்பதம் சதவீதத்தை அதிகரிக்க அரசிடம் கோரிக்கை வைத்தோம். முதல்வர் ஸ்டாலின் அனுமதியுடன் இந்த விவகாரம் தொடர்பாக துறை செயலர் மத்திய அரசின் துறை செயலருக்கு கடிதம் எழுதினார். அதன்பேரில் தமிழகத்திற்கு 3 மத்திய குழுக்கள் வந்து பார்வையிட்டனர். அந்த ஆய்வின்போது நெல் ஈரப்பதம் 20 முதல் 25 சதவீதம் இருந்தது. எனவே அவர்கள் அனுமதி வழங்கவில்லை. நெல் ஈரப்பதம் 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். செறிவூட்டப்பட்ட அரிசி 100 கிலோவிற்கு ஒரு கிலோ சேர்க்க வேண்டும் என விதி இருந்தது. இதில் ஜூலை முதல் மத்திய அரசு புதிய நடைமுறை கொண்டு வந்துள்ளது. அதன்படி 34 ஆயிரம் டன் கொள்முதலுக்கு 5 ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி வழங்கினோம். 10 மெட்ரிக் டன்னுக்கு ஒரு மாதிரி எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. விதிவிலக்காக 25 மெட்ரிக் டன்னுக்கு மாதிரி எடுக்க கூறியிருந்தோம். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், தமிழகத்தில் அதிகளவு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் நெல் ஆய்வு செய்வது வட இந்தியாவில் உள்ளது. ஆய்வு மையத்தை தென்னிந்திய பகுதியில் அமைக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறோம். எதிர்க்கட்சித்தலைவர் பழனிசாமி, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல் ஆய்வு செய்தனர். அவர்களாவது அனுமதி வாங்கி கொடுக்கலாம். கூட்டணியில் இருக்கும் அன்புமணி முயற்சி எடுக்கவில்லை. 2021 சட்டசபை தேர்தலில் டெல்டா மாவட்டங்களில் அதிக இடங்களில் தி.மு.க., வெற்றி பெற்றது. அதனால் 'நெல்' ஐ வைத்து அரசியல் செய்ய அ.தி.மு.க., பா.ஜ., நினைக்கின்றன. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, சட்ட அமைச்சர் ரகுபதி தெளிவான விளக்கம் கொடுத்துள்ளனர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை