உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  தாராபுரம் ரோட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

 தாராபுரம் ரோட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

ஒட்டன்சத்திரம்: ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட பின்பும் ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசலால் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஒட்டன்சத்திரம் நகரை கடந்து செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. நெரிசலை குறைக்கும் வகையில் ஒட்டன்சத்திரம் நகரை சுற்றி செல்லும் வகையில் லெக்கையன்கோட்டையில் இருந்து பொள்ளாச்சி வரை புதிதாக பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக ஒட்டன்சத்திரம் நகருக்குள் நுழையாமல் பழநி, தாராபுரம் வழித்தடங்களில் வாகனங்கள் செல்ல வழி வகை ஏற்பட்டது. சரக்கு வாகனங்கள், சுற்றுலாவாகனங்கள் இந்த பைபாஸ் ரோடு வழியாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு மாறாக நெரிசல் இன்னும் அதிகரித்துள்ளது. தாராபுரம் ரோடு நான்கு வழிச்சாலையாக மாற்றம் செய்யப்பட்ட போதிலும் ஆக்கிரமிப்பு காரணமாக பல இடங்களில் ஒரு வழி பாதையாக உள்ளது. மேலும் இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் நடுரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி செல்வதால் பஸ் பின்புறம் வரும் வாகனங்கள் பஸ் நகரும் வரை நகர முடியாமல் காத்திருக்க வேண்டியுள்ளது. தும்மிச்சம்பட்டி பிரிவு பஸ் நிறுத்தத்தில் மார்க்கெட் ரோடும் தும்மிச்சம்பட்டி பிரிவு ரோடும் தாராபுரம் ரோட்டுடன் இணைகின்றன. இந்த பகுதியில் டூவீலர் போக்குவரத்து அதிகம் உள்ளது. இந்த இடத்தில் நெரிசல் அதிகம் உள்ளதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை. நெரிசல் அதிகமான நேரங்களில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை