உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சுகாதாரமற்ற குடிநீர், இறப்பு சான்றுக்கு அலைக்கழிப்பு

 சுகாதாரமற்ற குடிநீர், இறப்பு சான்றுக்கு அலைக்கழிப்பு

திண்டுக்கல்: சுகாதாரமற்ற குடிநீர், போலீஸ் அத்துமீறல், இறப்பு சான்றுக்கு அலைக்கழிப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக 304 பேர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர். கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. தாட்கோ மூலம் கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார். கொடைக்கானல் காமனுார் ஊராட்சி மங்களம்கொம்பு சேர்ந்த 50க்கு மேற்பட்ட மலை கிராம மக்கள் கலங்கலான குடிநீர் பாட்டிலுடன் வந்து அளித்த மனுவில், மங்களம்கொம்பு 2வது வார்டு பகுதியில் 150 குடும்பத்தை சேர்ந்த 400க்கு மேற்பட்டோர் வசிக்கிறோம். தோட்ட கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் வழங்கப்படும் குடிநீர் சுகாதாரமற்று கலங்கலாக வருகிறது. இதுவும் 5 மாதமாக வழங்கப்படவில்லை. ஊராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டுள்ளார். திண்டுக்கல்லையடுத்த நந்தவனப்பட்டி காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சகோதரர்கள் சங்கர், பிரபு,கென்னடி ஆகியோர் அரை நிர்வாணத்துடன் வந்து அளித்த மனுவில், எங்களது தந்தை பொன்னனுக்கு அரசின் சார்பில் 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் போலீசார் ஒருவர் அவரது உறவினரை கொண்டு ஆக்கிரமித்து செட் அமைத்துள்ளனர். ஏப்ரலில் பட்டா கேட்டும், ஆக்கிரமிப்பு அகற்ற கோரி மனு அளித்தோம். ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பி 32 நாட்கள் ஆகிறது. இதுவரை அகற்றவில்லை. தற்போது சுற்றுச்சுவர் எழுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற்றி தர வேண்டும் என தெரிவித்திருந்தனர். கொடைக்கானல் குரும்பரையூர் கார்த்திகேயன் அளித்த மனுவில், எனது தாத்தா தேராடி இருக்கும் போதே யு.டி.ஆர்., பட்டா வழங்கவில்லை. 1971ல் அவர் இறந்து விட்டார். அறியாமையின் காரணமாக அவரின் இறப்பை பதிவு செய்யவில்லை. பலமுறை இறப்பு சான்று கேட்டு மனு அளித்தும் அலைக் கழிக்கப்பட்டுள்ளேன். அந்த இடத்திற்கு பட்டா வழங்கி தாத்தாவின் இறப்பு சான்றிதழையும் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி