சென்னிமலை: சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உபகோவிலான, சென்னிமலை கைலாசசநாதர் கோவில், சென்னிமலை கிழக்கு ராஜவீதியில் அமைந்துள்ளது. 800 ஆண்டு பழமையான கோவிலில், 2005ல் கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகளை கடந்த நிலையில், கும்பாபிஷேகம் செய்ய தீர்மானித்து திருப்பணிகள் தொடங்கின.ஊர்மக்கள், நன்கொடையாளர் ஒத்துழைப்புடன், கோவிலை புதுப்பித்து ராஜகோபுரம், மகாமண்டபம், விமானங்கள், வர்ணங்கள் தீட்டப்பட்டு, திருப்பணி நடந்தது. கும்பாபிஷேக விழா கடந்த நவ.,27ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இந்நிலையில் நேற்று அதிகாலை, 3:௦௦ மணிக்கு நான்காம் கால யாகபூஜையை தொடர்ந்து, 5:௦௦ மணிக்கு பரிவார மூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காலை, 6:10 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு, 6:45 மணிக்கு ராஜகோபுரம், மூலாலய விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடந்தது.அப்போது கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் சிவாய நமஹ என பக்தி பெருக்குடன் கோஷமிட்டனர். காலை, 7:௦௦ மணிக்கு ஸ்ரீகைலாசநாதர், பெரியநாயகி, வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமிகளுக்கு மூலாலய மஹா கும்பாபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் தலைமை குருக்கள் ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் வேத வித்யாலய முதல்வர் பிச்சை குருக்கள், திருப்பரங்குன்றம் ஸ்கந்த குரு வித்யாலயம் முதல்வர் ராஜா பட்டர், கூனம்பட்டி ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள், மருதுறை குருக்கள் பாளையம் ஆதீனம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள், பிடாரியூர் ஆதினம் சுந்தர சென்னிகிரி பண்டித குரு சுவாமிகள், சென்னிமலை சுப்புசாமி பங்கேற்று அருளாசி வழங்கினர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரவணன், அறங்காவல குழு தலைவர் பழனிவேல், உறுப்பினர்கள் மனோகரன், பாலசுப்பிரமணியம், கண்காணிப்பாளர் மாணிக்கம், மற்றும் கட்டளைதாரர்கள் பூந்துறை, வெள்ளோடு, நசியனுார், எழுமாத்தூர் என நான்கு நாட்டு கவுண்டர்கள் செய்திருந்தனர். காலை முதல் மாலை வரை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. மாலையில் சங்காபிஷேகம், அதை தொடர்ந்து பெரியநாயகி உடனமர் கைலாசநாதருக்கு திருக்கல்யாண உற்சவம், தொடர்ந்து பஞ்சமூர்த்தி திருவீதியுலா நடந்தது.