புகையிலையால் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் இறப்பு; விழிப்புணர்வு பேரணியில் தகவல்
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில், பொது சுகாதாரத்துறை சார்பில், மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம், இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா துவக்கி வைத்தார். புகையிலையை இருவிதமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். புகைக்கும் மற்றும் மென்று சுவைக்கும் புகையிலையாக உள்ளது. புகையிலை பொருட்களில், 3,000 முதல், 4,000 சதவீதம் வரை, நச்சு பொருள் அடங்கியுள்ளது. 200 வித விஷ பொருட்கள் உள்ளன. புற்றுநோயை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகும். அதிலுள்ள நிக்கோட்டின் விஷ பொருட்களின் துாண்டுதலால் இளம் வயதினர் அதிக பழக்கத்துக்கு ஆளாகின்றனர். நடுத்தர வயது மரண விகிதத்துக்கு காரணமாகிறது. இந்தியாவில் ஆண்டுக்கு புகையிலை பயன்பாட்டால், 10 முதல், 12 லட்சம் பேர் இறப்பதாக தெரிவித்தனர். ஈரோடு அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணி, கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.