கோபி: அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் கோபி அருகே கரட்டூரில் உள்ள, த.வெ.க., அலுவலகத்தில், அவரது உருவப்படத்துக்கு, த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரான செங்கோட்டையன் நேற்று மலர் துாவி மரியாதை செலுத்தினார்.அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ''எதிர்கால தமிழகத்தை ஆளப்போகும் தலைவர் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்,'' என்றார். 'ஒருத்தர் மேல் உள்ள கோபத்தில், அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்க கூடாது. நீங்கள் (செங்கோட்டையன்) எடுத்திருக்கும் முடிவு, அவசரத்தில் எடுத்த முடிவு என சசிகலா கூறியுள்ளாரே' என, நிருபர்கள் கேட்டதற்கு, ''நீங்கள் நிறைய கேள்வி கேட்கிறீர்கள்,'' என, கும்பிடு போட்டுவிட்டு சென்றார்.முன்னதாக, அ.தி.மு.க., தி.மு.க., மற்றும் பா.ஜ., என நுாற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், செங்கோட்டையன் முன்னிலையில், த.வெ.க.,வில் நேற்று இணைந்தனர். எங்கேயும் எப்போதும், ஜீவா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த துணைநடிகர் ஜீவா ரவி, செங்கோட்டையனை சந்தித்தவர் கூறுகையில், ''நானும் த.வெ.க., கட்சியில் இணையலாம். அது அடுத்தமாதம் தான் தெரியும்,'' என்றார். செங்கோட்டையன் கூறுகையில், ''நடிகர் ஜீவா ரவி, த.வெ.க.,வில் இணையப்போகிறார்,'' என்றார்.