க ள்ளக்குறிச்சி தொகுதியில் தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த அ.தி.மு.க., வரும் தேர்தலிலும் நேரடியாக களம் காணும் என்பது உறுதியாக தெரிகிறது. கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியை பொருத்தவரை அ.தி.மு.க., தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக வரும் தேர்தலிலும் வெற்றி வாய்ப்பு தங்களுக்கே சாதகமாக இருக்கும் என்று அ.தி.மு.க., கருதுகிறது. இதனால் இக்கட்சியில் கள்ளக்குறிச்சி தொகுதியில் சீட் பெற கடும் போட்டி நிலவுகிறது. கடந்த 2009ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பில் கள்ளக்குறிச்சி தொகுதி உருவாக்கப்பட்ட பின் 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.,கவும் தி.மு.க., கூட்டணி சார்பில் வி.சி.,வும் போட்டியிட்டது. அ.தி.மு.க.,வில் போட்டியிட்ட அழகுவேல் பாபு ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 249 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். வி.சி., வேட்பாளர் பாவரசு 51 ஆயிரத்து 251 ஓட்டுகள் பெற்றார். இத்தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க., அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டாப் 10 தொகுதிகளில் கள்ளக்குறிச்சியும் ஒன்றாகும். தொடர்ந்து 2016 தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., நேரடியாக மோதியது. இதனால் கடும் போட்டி நிலவியது. முடிவில் அ.தி.மு.க., வேட்பாளர் பிரபு 90 ஆயிரத்து 108 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க., வேட்பாளர் காமராஜ் 86 ஆயிரத்து 4 ஓட்டுகள் பெற்று 4,104 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்நிலையில் கடந்த 2021 தேர்தலில் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்., இடையே பலப்பரீட்சை நடந்தது. முடிவில் அ.தி.மு.க., வேட்பாளர் செந்தில்குமார் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 643 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் மணிரத்தினம் 84 ஆயிரத்து 752 ஓட்டுகள் பெற்றார். கடந்த 3 தேர்தலிலும் தி.மு.க.,வுடனும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள காங்., மற்றும் வி.சி., ஆகிய கட்சியுடன் மோதி ஹாட்ரிக் வெற்றியை அ.தி.மு.க., சுவைத்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை விரும்பி தி.மு.க.,வை மக்கள் ஆதரித்த போதிலும் கள்ளக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் தேர்தலில் எதிரணியில் யார் களமிறங்கினாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க., நேரடியாக இத்தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.