| ADDED : டிச 07, 2025 06:00 AM
கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தை தி.மு.க., ஊராட்சி தலைவர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உளுந்துார்பேட்டை எலவனாசூர்கோட்டை அருகே ஏ.புத்துாரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இதன் நடுவே கிணறு வெட்டி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏரியில் முதியவர் இறந்து கிடந்தார். இந்த குடிநீரால் பாதிப்பு ஏற்படும் என கருதி அப்பகுதியைச் சேர்ந்த சிலர், ஏரி கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பூங்கொடி, அலுவலகப் பணியாளர் புஷ்பவள்ளி ஆகியோர் உடைபட்ட ஏரி கரையை சீரமைத்தனர். இதனை அறிந்த தி.மு.க., ஊராட்சி தலைவர் நந்தகுமார் மற்றும் சிலர் பொதுப்பணித்துறை அலுவரிடம் வாக்குவாதம் செய்தனர். இரு தரப்பினரும் திட்டிக் கொண்டனர். இது குறித்து பொதுப்பணித்துறை அலுவலர் புஷ்பவள்ளி, ஊராட்சி தலைவர் நந்தகுமார் தனித்தனியாக எலவனாசூர்கோட்டை போலீசில் புகார் அளித்தனர். புஷ்பவள்ளி கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர் நந்தகுமார் மற்றும் மணவாளன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஊராட்சி தலைவர் நந்தகுமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யவில்லை. இதனால் ஆவேசமடைந்த ஊராட்சி தலைவர் நந்தகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் 2.30 மணிக்கு, எலவனாசூர்கோட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பொதுப்பணித்துறை அலுவலர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். மறுத்தால் தன்னை கைது செய்யுங்கள் என ஊராட்சி தலைவர் நந்தகுமார் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.