வீட்டின் பூட்டை திறந்து பட்டப்பகலில் பணம் திருட்டு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பூட்டிய வீட்டில் பட்டப் பகலில் நகை பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த பாடியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன், 50; கடந்த 11ம் தேதி காலை 10:00 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் வயலுக்கு சென்றிருந்தார். மதியம் 12:00 மணியளவில் வீட்டிற்கு வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, பீரோ திறந்த நிலையில் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பீரோவின் உள் அறையில் வைத்திருந்த 50,000 பணம், வெள்ளி கொலுசு ஆகியவை திருடப்பட்டிருந்தது. துணிகளுக்கு இடையே வைத்திருந்த சாவியை எடுத்து நகை, பணம் திருடியது தெரியவந்தது. அதேபோல் வீட்டின் முன் பக்க கதவு சாவியையும் கோலமாவு டப்பாவில் இருந்து எடுத்து திறந்து உள்ளே சென்று திருடிவிட்டு மீண்டும் அதே போல் கோலமாவு டப்பாவில் சந்தேகப்படாத அளவில் வைத்துவிட்டு சென்றது தெரியவந்தது. இதனால் இந்த விவரங்கள் தெரிய நபர் யாரோ இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இது குறித்து தேவேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.