மணிமுக்தா அணையில் பாசன மதகு வரை ஆழப்படுத்த கோரிக்கை! தண்ணீர் ஆற்றில் வௌியேறி வீணாவதை தடுக்கலாம்
கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் பழைய ஷட்டர் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளதால், அணைக்கு வரும் தண்ணீர் பாசன மதகு வழியாக செல்ல பழைய ஷட்டரில் இருந்து பாசன மதகு வரை மெகா சைஸ் பள்ளம் தோண்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம், 736.96 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் பெய்யும் மழை நீர் மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. இதுதவிர, மூரார்பாளையம் பாப்பாங்கால் ஓடையும் அணைக்கு நீர்வரத்தாக உள்ளது. மழைக்காலத்தில் அணையில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டு, விவசாயத்திற்காக பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். மணிமுக்தா அணையில் இருந்து முடியனுார் வரை 12.337 கி.மீ., துாரத்திற்கு பிரதான கால்வாயும், 3 கிளை கால்வாய்களும் உள்ளது. இதன் மூலம் பழைய மற்றும் புதிய பாசனத்தை சேர்ந்த 5,493 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் பயன்பெறும். மேலும், பல்லகச்சேரி, வாணியந்தல், தண்டலை, பெருவங்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராம ஏரிகள் நிரம்பும். கன மழை பெய்து அணை முழு கொள்ளளவை எட்டினால், 3 பழைய ஷட்டர்கள் மற்றும் 4 புதிய ஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். இதனால் ஆற்றில் உள்ள அணைக்கட்டுகள் நிரம்புவதுடன், ஆற்றினை ஒட்டியவாறு உள்ள வாய்க்கால்கள் வழியாக அருகாமையில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீர் செல்லும். இதில், கடந்த 1970ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பழைய ஷட்டர்களும் துருப்பிடித்து வலுவிழந்துள்ளது. தண்ணீர் தாங்கும் திறன் முற்றிலுமாக குறைந்துள்ளதால், அணையில் 30 அடி உயரத்திற்கு மேல் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. பழைய ஷட்டர்கள் எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலை இருந்தது. இதையொட்டி, ரூ.20.76 கோடி மதிப்பில் பழைய ஷட்டர்களை புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், நடப்பாண்டு மணிமுக்தா அணையில் தண்ணீர் தேக்கி வைக்க இயலாது. கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அணைக்கு வரும் தண்ணீர் முழுதும் மணிமுக்தா ஆறு வழியாக வெளியேற்றப்படுகிறது. ஆற்றில் செல்லும் தண்ணீர் கடலில் கலந்து வீணாகுவதால், அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஏனெனில், அணையின் பழைய ஷட்டர் பகுதி தாழ்வாகவும், பாசன மதகு உள்ள பகுதி உயரத்திலும் உள்ளது. இதனால், குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் தண்ணீர் தேக்கி வைத்தால் மட்டுமே பாசன மதகு உள்ள பகுதிக்கு தண்ணீர் செல்லும். தண்ணீர் வீணாகுவதை தவிர்க்க, அணையின் பழைய ஷட்டரில் இருந்து பாசன மதகு உள்ள பகுதிக்கு தண்ணீர் செல்லும் வகையில் மெகா சைஸ் பள்ளம் தோண்ட வேண்டும். இதன் மூலம் அணையின் பழைய ஷட்டர் பகுதிக்கு வரும் தண்ணீர், பாசன மதகு உள்ள பகுதிக்கு தானாகவே செல்லும். அதிகளவு தண்ணீர் தேங்கும் பட்சத்தில் பாசன கால்வாய் வழியாக தண்ணீரை வெளியேற்றலாம். இவ்வாறு செய்வதன் மூலம் அணை பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் பயன்பெறுவர். முன்னதாக, அணையில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்களை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.