உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தியாகதுருகத்தில் மாட்டிறைச்சி கூடம்... அமைக்கப்படுமா?: திறந்த வெளியில் வெட்டும் அவலம்

தியாகதுருகத்தில் மாட்டிறைச்சி கூடம்... அமைக்கப்படுமா?: திறந்த வெளியில் வெட்டும் அவலம்

தியாகதுருகம்: தியாகதுருகம் நகரையொட்டி, சாலையோரத்திலேயே மாடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்வதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் மாட்டிறைச்சி கூடம் அமைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தியாகதுருகம் பஸ் நிலையத்தையொட்டி, சனிக்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுகிறது. இங்கு ஆடு, மாடுகள் விற்பனையும் அதிக அளவில் நடக்கும். இதன் காரணமாக பல ஆண்டுகளாக மாட்டிறைச்சி விற்பனைக்கு பெயர் பெற்ற இடமாக இது உள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் வரை பஸ் நிலையம் எதிரில் உள்ள மேல் பூண்டி தக்கா ஏரிக்கரையில் மாடுகளை வெட்டி இறைச்சி விற்பனை நடந்து வந்தது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி திறந்தவெளியில் மாட்டிறைச்சி விற்பனை செய்வது பொதுமக்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தியது. அதேபோல் இறைச்சி கழிவுகளை ஏரியில் கொட்டுவதால் தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்போது 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிட்டதன் எதிரொலியாக அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தி வேறு இடத்துக்கு மாற்றினார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் தியாகதுருகம் நகரின் போக்குவரத்தை குறைக்க திருக்கோவிலுார் - கள்ளக்குறிச்சி சாலையை இணைக்கும் வகையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இச்சாலை பிரிதிவிமங்கலம் ஊராட்சி அலுவலகம் எதிரில் துவங்கி மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி அருகே திருக்கோவிலுார் சாலையை இணைக்கிறது. புதிதாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலையோரத்திலேயே தற்போது செயல்படும் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் இடம் உள்ளது. ஒதுக்குப்புறமாக இருந்த மாட்டிறைச்சி விற்பனை செய்யும் இடமானது தற்போது புறவழிச்சாலை அமைக் கப்பட்ட பின் அனைவரும் பார்க்கும் வகையில் வெட்ட வெளியில் வெட்டி விற்பனை செய்கின்றனர். திறந்த வெளியில் மாடுகளை வெட்டுவதாலும், இறைச்சியை கழிகளில் கட்டி தொங்கவிட்டு விற்பனை செய்வதாலும் அவ்வழியே செல்பவர்கள் முகம் சுளிக்கின்றனர். இறைச்சி கழிவுகளை ஆங்காங்கே குவித்து வைப்பதால் பல மீட்டர் துாரத்திற்கு துர்நாற்றம் வீசுகிறது. இதற்கு தீர்வாக மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு தனியாக கூடம் அமைக்க அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மாட்டிறைச்சி விற்பனை செய்யும் இடத்திற்கு எதிரே டாஸ்மாக் கடையும் அமைந்துள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு இறைச்சி மற்றும் மதுபாட்டில் வாங்குபவர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் புறவழிச் சாலையில் செல்வதை பெரும்பாலானோர் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் இவ்வழியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். டாஸ்மாக் கடையை இங்கு செயல்படவும், திறந்த வெளியில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கும் பொதுமக்களின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடனடியாக மாட்டிறைச்சி கூடம் அமைத்து கொடுப்பதோடு இங்கு இடையூறாக செயல் படும் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை