உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சியில் 17ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு

 காஞ்சியில் 17ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை, வேளிங்கபட்டரை வேகவதி ஆற்றின் கரையில், 17ம் நுாற்றாண்டு சதிகல் சிற்பத்தை நேற்று வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். காஞ்சிபுரம் ஓரிக்கை, வேளிங்கபட்டரை வேகவதி ஆற்றங்கரையில் வரலாற்று ஆய்வாளர் முனைவர் அன்பழகன் காஞ்சிபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கர் ஆகியோர் நேற்று களஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வேகவதி ஆற்றின் பாலம் அருகில் உள்ள திருவள்ளுவர் தெருவில் கி.பி.17ம் நுாற்றாண்டைச் சார்ந்த சதிகல் சிற்பம் ஒன்றை கண்டறிந்தனர். இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் அன்பழகன், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் உமா சங்கர் ஆகியோர் கூறியதாவது: காஞ்சிபுரம் ஓரிக்கை, வேளிங்கப்பட்டரை வேகவதி ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் வகை சேர்ந்த சதிகல் சிற்பம் 51 செ.மீ., அகலமும், 55 செ.மீ., உயரமும் கொண்டது. கிழக்கு திசை பார்த்தவாறு உள்ள இந்த சதிகல் புடைப்பு சிற்பத்தில், வீரன் ஒருவனுடன் அவனது இரு மனைவிகள் உள்ளனர். நடுவில் உள்ள ஆண்சிற்பம் கம்பீரமான தோற்றத்துடன் நேர்நிலையில் நிற்கிறது. அவரது வலதுகை தடிமனான கூரிய வாள் ஒன்றை உயர்த்தி பிடித்துள்ளது. இடதுகை, இடது தொடையின் மீது வைக்கப்பட்டுள்ளது. முகத்தில் முறுக்கிய மீசையுடன், ஒழுங்கு செய்யப்பட்ட தாடி காணப்படுகிறது. மேலும் நன்கு சீவப்பட்ட தலைமுடி மற்றும் இடப்பக்கமாக உள்ள கொண்டையினை மெல்லிய துணி கொண்டு இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அமைப்புகள் இதுவரையில் கண்டெடுக்கப்பட்ட சதிகல் சிற்பங்களில் காணப்படாத ஒன்றாகும். வீரனின் வலப்பக்கம் நிற்கும் பெண்சிற்பம் வலதுகை தொங்கவிட்டிருக்கும் நிலையில் இடதுகை மலர்மொட்டு ஒன்றை உயர்த்திப் பிடித்துள்ளது. இடப்பக்கம் நிற்கும்பெண் சிற்பம், வலதுகையில் மலர்மொட்டு ஒன்றை வயிற்றின் முன் பகுதியில் வைத்திருக்க இடதுகை குடுவை ஒன்றைப் பிடித்துள்ளது. பெண்கள் இருவருக்கும் வலதுபக்க கொண்டை காணப்படுகிறது. மூவரின் கை, தோள்பட்டை, கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் அணிகலன்கள் காணப்படுகின்றன. காதுகளில் வட்டவடிவில் மிக தடிமனான காதணிகள் உள்ளன. மூவரும் இடை பகுதியிலிருந்து கால் மணி கட்டுவரையில் பட்டாடை அணிந்துள்ளனர். மூவரின் சிற்பங்களும் சிற்சில இடங்களில் சிதைந்துள்ளன. மூவரின் முகங்களும் மிகவும் மழுங்கிய நிலையில் காணப்படுகின்றன. கல்வெட்டு எழுத்துக்கள் எதுவுமற்ற இச்சதிகல் சிற்பத்தின் காலம் கி.பி., 17ம் நுாற்றாண்டாக இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை