திருமுக்கூடல்: திருமுக்கூடல் பாலாற்று பாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 'பீக்ஹவர்' நேரங்களில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டும் நேற்று வழக்கம் போல, தொடர்ந்து இயங்கியதால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் தனியார் கல் குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து நாள் முழுதும் கனரக வாகனங்கள் அதிக அளவு இயக்கப்படுகின்றன. இந்த கனரக வாகனங்கள் பழவேரி மற்றும் பினாயூர் மலையடிவாரம் வழியாக திருமுக்கூடல் பாலாற்று பாலத்தை கடந்து, பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ - மாணவியர், தொழிலாளர்கள், வணிகர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தினசரி அவதிக்குள்ளாகி வருகின்றனர். சமீப காலமாக திருமுக்கூடல் பாலத்தின் மீது விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அச்சத்திற்குள்ளான அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார வாகன ஓட்டிகள் திருமுக்கூடல் பாலம் மீது கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கக்கோரி அதிகாரிகள் மற்றும் காவல்துறையை தொடர்பு கொண்டனர். இது தொடர்பாக, கடந்த 28ம் தேதி சாலவாக்கம் போலீசார் முன்னிலையில், கல் குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள், திருமுக்கூடல், பழவேரி, பினாயூர், பழையசீவரம், சிறுமையிலுார், சிறுதாமூர் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்கள், மக்கள் ஒருங்கிணைந்த முத்தரப்பு பேச்சு நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளில், திருமுக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களில் 'பீக்ஹவர்' நேரமான காலை 7:00 - 9:00; மாலை 4:00 - 6:00 மணி வரை, கனரக வாகனங்கள் இயக்க தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த நடைமுறை அன்று முதல் பின்பற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று காலையில் வழக்கம்போல, கனரக வாகனங்கள் கிராம சாலை மற்றும் திருமுக்கூடல் பாலம் மீது இயங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் திருமுக்கூடல் சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிருப்திக்குள்ளாகினர். இதுகுறித்து, சாலவாக்கம் காவல் ஆய்வாளர் பாலசந்திரன் கூறியதாவது: காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்குவதற்கான தடை குறித்து அனைத்து கல் குவாரி மற்றும் கிரஷர் நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டு கையொப்பமாகி உள்ளது. விதிகளுக்கு உட் படாத கனரக வாகனங்கள் குறித்து போலீசார் மூலம் கண்காணித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.