ஏரிக்கரை சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
உத்திரமேரூர்: களியாம்பூண்டியில், அம்மையப்பநல்லூர் செல்லும் ஏரிக்கரை சாலையை சீரமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்திரமேரூர் தாலுகா, களியாம்பூண்டி கிராமத்தில் இருந்து, அம்மையப்பநல்லூர் செல்லும் ஏரிக்கரை சாலை உள்ளது. இச்சாலையை பயன்படுத்தி, களியாம்பூண்டி, மேல்பாக்கம், இளநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர், உத்திரமேரூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இச்சாலையில், தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. ஒராண்டிற்கு முன் அமைக்கப்பட்ட இச்சாலை, முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து சாலையில் படர்ந்துள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பின்னே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் போது, செடிகளில் சிக்கி நிலைத்தடுமாறி, விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, களியாம்பூண்டி ஏரிக்கரை சாலையில், இருபுறமும் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி சீரமைக்க, ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.