கொளத்துாரில் ரூ.32 லட்சத்தில் அரசு பள்ளிக்கு புது வகுப்பறை
ஸ்ரீபெரும்புதுார்: கூரை இடிந்து விழுந்து சேதமான, கொளத்துார் அரசு பள்ளிக்கு, 32.80 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டடங்கள், விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன. ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட கொளத்துார் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 43 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில், கடந்த ஆண்டு ஆக., மாதம், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு, வகுப்பறை கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள், பள்ளியில் உள்ள ஸ்மார்ட் வகுப்பறையில் அமர்ந்து படித்து வருகின்றனர். இந்த நிலையில், சேதமடைந்த பள்ளி வகுப்பறைக்கு மாற்றாக, புதிய வகுப்பறைகள் கட்ட கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, குழந்தைகள் நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 2023 - 24ம் நிதி ஆண்டின்கீழ், 32.80 லட்சம் ரூபாய் மதிப்பில், இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. கட்டுமான பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், விரைவில் புதிய வகுப்பறைகள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக, பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார்.