| ADDED : டிச 02, 2025 04:57 AM
காஞ்சிபுரம்: விருதசீர நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், கணபதிபுரம் இருளர் குடியிருப்பு பகுதியில், தண்ணீர் சூழ்ந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டம், தைப்பாக்கம் கிராமம் வழியாக, கம்பன் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இருந்து, மக்ளின் கால்வாய் தனியாக பிரிந்து மேல் வேண்பாக்கம், கீழ் வேண்பாக்கம், திருமால்பூர், பள்ளூர், புள்ளலுார், புரிசை வழியாக கூவம் ஆற்றில் விருதசீர நதி கலக்கிறது. இந்த விருதசீர நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம் கணபதிபுரம் கிராம இருளர் குடியிருப்பு பகுதியை, வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், இருளர் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஓதம் வருகிறது என, இருளர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, கணபதிபுரம் இருளர் மக்கள் கூறியதாவது: எங்களில் சிலருக்கு, சித்துார் கிராமம் செல்லும் சாலையில், 'பிரதமர் -ஜன்மன்' திட்டத்தில் குடியிருப்புகள் கட்டி அரைகுறையாக விட்டுள்ளனர். இந்த வீடு கட்டும் பணி நிறைவு பெற்றிருந்தால், நிம்மதியாக சென்றிருப்போம். ஒப்பந்தம் எடுத்தவர் பணி நிறைவு செய்யாததால், ஓதத்தில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதிகாரிகள் வீடு கட்டும் பணியை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.