காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம் நாளை அதிகாலை நடைபெற இருப்பதால், காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக, போலீசார் அறிவித்துள்ளனர். காஞ்சிபுரம் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில், 29 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணி நடந்து முடிந்த நிலையில், நாளை வெகு விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகள் இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், ஹிந்து சமய அறநிலையத்துறை, போலீசார், மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள் என்பதால், போலீசார் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். நாளை, அதிகாலை 2:00 மணி முதல், சென்னையிலிருந்து காஞ்சிபுரம் நகரத்திற்கு வரும் பேருந்துகள் வெள்ளைகேட், ஒலிமுகமதுபேட்டை, குஜராத்தி சத்திரம், புத்தேரி தெரு, கச்சபேஸ்வரர் கோவில் வழியாக பேருந்து நிலையம் வந்து சேரும் வகையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னை மற்றும் வேலுார் செல்லும் பேருந்துகள், டவுன் பேங்க், பூக்கடைச்சத்திரம், கம்மாளத் தெரு வழியாக பொன்னேரிக்கரை பாலம் வழியாக செல்லும். ஆட்டோ அனுமதியில்லை இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், ஒலிமுகமதுபேட்டையில் உள்ள யாத்திரி நிவாஸ், உலகலந்த பெருமாள் கோவில் பார்க்கிங், எஸ்.எஸ்.கே.வி., பள்ளி வளாகம், மெக்லின் மைதானம், புதிய ரயில் நிலையம், சோழன் பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ல வேண்டும் என மாவட்ட காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. குஜராத்திசத்திரம் முதல், கம்மாளத் தெரு சந்திப்பு வரையும், சங்கரமடம் முதல், கச்சபேஸ்வரர் கோவில் வரையும், ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெரு, தேரடி தெரு, பெருமாள் தெரு, கிழக்கு மாடவீதி ஆகிய இடங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் செல்ல அனுமதியில்லை. போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும். ஒத்துழைப்பு கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்கள் ஏகாம்பரநாதர் கோவில் சன்னிதி தெரு வழியாக மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். கும்பாபிஷேகம் நடைபெறும் நாளன்று, பணிக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் முன் ஏற்பாடாக திட்டமிட்டு செயல்பட வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்படுகிறது. காவல் துறைக்கு பக்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என, போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். 149 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் உள்ள 149 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை நடைபெறும் கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சிக்கு, உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், காஞ்சிபுரம் நகரில் உள்ள, அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என, 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நளினி உத்தரவிட்டுள்ளார்.