| ADDED : டிச 02, 2025 04:59 AM
குன்றத்துார்.: விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தபிரகாஷ், 34. இவர் போரூரில் தங்கி, ஏரிகளில் மீன் பிடித்து விற்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, குன்றத்துார் அருகே நந்தம்பாக்கம் ஏரியில் மீன் பிடித்து விட்டு நடந்து சென்றார். அப்போது, அங்கு ஒரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர், ஆனந்தபிரகாஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம், மொபைல் போனை கேட்டுள்ளனர். ஆனால், ஆனந்தபிரகாஷ் தர மறுத்து, அங்கிருந்து தப்பியோடினார். பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், ஆனந்த பிரகாஷை துரத்தி சரமாரியாக கத்தியால் வெட்டி, மொபைல் போன், பணத்தை பறித்து சென்றனர். கை, கால், இடுப்பில் பலத்த வெட்டு காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த ஆனந்த பிரகாஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தாம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், அங்கிருந்து ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து, திருமுடிவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.