கரூர்: கரூர் மாவட்டத்தில் நடந்த ஊரக திறனாய்வு தேர்வில், 1,706 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர்.தமிழக அரசு தேர்வு இயக்ககத்தால், ஊரக பகுதிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, ஊரக திறனாய்வு தேர்வு, 1991--1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், 50 மாணவர்கள், 50 மாணவியர் ஆண்டிற்கு, 1,000 ரூபாய்- வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். 2025--26ம் கல்வியாண்டில் தமிழகத்தில், சென்னை தவிர்த்து, ஊரக பகுதியில் கிராம பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கலந்துகொள்ளலாம். 2025--26ம் கல்வியாண்டிற்கான, தமிழக ஊரக திறனாய்வு தேர்வு, நவ., 29 ல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு, நேற்று நடந்தது.கரூர் மாவட்டத்தில், 9 மையங்களில், 1,811 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில், கரூர், காந்திகிராமம் தெரசா பெண்கள் மேல்நிலை பள்ளியில், 212 பேர், கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலை பள்ளியில், 184 பேர், அரவக்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளியில், 155 பேர், க.பரமத்தி அரசு மேல்நிலை பள்ளியில், 120 பேர், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலை பள்ளியில், 275 பேர், தோகைமலை அரசு மேல்நிலை பள்ளியில், 301 பேர், குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், 123 பேர், தரகம்பட்டி மாதிரி மேல்நிலை பள்ளியில், 170 பேர், தரகம்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், 166 பேர் என மொத்தம், 1,706 மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். 105 மாணவ, மாணவியர் தேர்வு எழுதவரவில்லை.