உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசின் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும்: துணை முதல்வர்

அரசின் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைக்க உறுதி செய்ய வேண்டும்: துணை முதல்வர்

கரூர், ''அரசின் திட்டங்கள், அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்து துறை பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. சிறப்பு திட்ட செயலாக்க துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், கரூர் எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் திட்டம், கரூர் மாவட்டத்திலுள்ள, 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 157 ஊராட்சிகளுக்கு கொண்டு சென்று செயல்படுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள், முறையாக இளைஞர்களுக்கு வழங்கப்பட்டு திரும்ப பெறப்படுகிறதா? அதற்கான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை குறிப்பிட்ட இடைவெளியில் ஆய்வு செய்ய வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்களில், செயல்படாத பழைய குழுக்களை மீண்டும் செயல்பட வைக்கவும், புதிய குழுக்களை உருவாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாக பதில் அளித்தாலே, முதல்வர் தனிப்பிரிவிற்கு வரும் மனுக்களின் எண்ணிக்கை குறையும். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், தகுதியுள்ள அனைவருக்கும் வீடு வழங்குவதை உறுதிபடுத்த வேண்டும். மகளிர் உரிமைத் திட்டத்தில் கடந்த முறை மனு செய்த, 1 கோடியே, 60 லட்சம் பேரில், 1 கோடியே, 15 லட்சம் பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கி வருகிறோம். இந்த தொகை பெற, அளிக்கப்படும் புதிய மனுக்களை முறையாக பரிசீலித்து, தகுதியுள்ள ஒருவர் கூட விடுபடாத வகையில் வழங்க வேண்டும். அரசின் திட்டங்கள், அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமின்றி, அரசு அலுவலர்கள் மக்களுக்கும் ஒரு நல்ல பாலமாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், கரூர் எம்.பி., ஜோதிமணி, எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளர் உமா, கலெக்டர் தங்கவேல், மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், கரூர் எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை