அரவக்குறிச்சி: பள்ளி மேலாண்மை குழு மூலம் மேற்கொள்ளப்படும் சிறுசிறு வேலைகளுக்கு, தங்கள் சொந்த செலவில் பணி மேற்கொள்ளப்படுவதால், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர். பள்ளிகளின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும கனரா வங்கி மூலம், 'சிங்கிள் நோடல் ஏஜன்சி' எனப்படும் வங்கி கணக்கு மூலம், பள்ளி மானியம், ஏனைய மானியங்கள் அனுப்பப்படுகின்றன. இது ஒரு இணையதள கணக்கு முறையாகும். ஒளிவு மறைவின்றி கணக்குகளை செயல்படுத்தும் சிறந்த திட்டமாகும்.இத்திட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழு தலைவருக்கு, 'மேக்கர் ஐடி'யும், தலைமை ஆசிரியருக்கு, 'செக்கர் ஐடி'யும் வழங்கப்பட்டு, பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானங்கள் மூலம் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு, இதன் வழியாகப் பணம் விடுவிக்கப்படுகிறது. ஒரு கடையில் பொருள் வாங்க வேண்டும் என்றால், அக்கடையின் வங்கி கணக்கை விற்பனையாளர், 'ஐடி'யாக உருவாக்கி, அதன் பின்னரே பணம் அனுப்ப இயலும். அந்த, 'வெண்டர் ஐடி' உருவாவதற்கு, 36 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.மேலும், கடைகளில் பணத்தை முன் பணமாக அளித்துவிட்டு, கடைக்காரருக்கு பணம் அவருடைய வங்கி கணக்கிற்கு சென்ற பின், மீண்டும் பணத்தை வாங்குவது தலைமை ஆசிரியர்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. மேலும், சிறுசிறு வேலைகள் பள்ளியில் மேற்கொள்ளப்படும்போது, கொத்தனார், பெயின்டர் போன்ற கூலி தொழிலாளர்களுக்கும் வங்கி கணக்கில் பணம் அனுப்புவதால், வேலையைச் செய்து முடித்தவுடன் கூலி கிடைப்பதில்லை என்பதால், கூலி தொழிலாளர்களும் வருத்தமடைகின்றனர்.எனவே, எஸ்.என்.ஏ., அக்கவுண்டை எளிமைப்படுத்தி, 'கூகுள் பே அல்லது யு.பி.ஐ., போன்ற ஒரு செயலியை உருவாக்கி பணம் கிடைக்கச் செய்வதன் மூலம் தொழிலாளர்களுக்கும் உடனே பணம் கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும். மேலும், அந்தந்த மாவட்டத்திலேயே பொருள்களை வாங்க வேண்டிய நிலை இருப்பதால், பள்ளிக்கு தேவையான பொருள்களை கூட்டுறவு பண்டக சாலைகளில் தரமான பொருட்களாக கிடைக்க செய்வதன் மூலமாக அரசின் கூட்டுறவு பண்டகசாலையும் வளரும். பள்ளிகளுக்கும் தரமான பொருள் வந்து கிடைக்கும்.இந்தாண்டு பள்ளி மானியம், 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 50 சதவீத மானியத்தை உடன் வழங்குவதன் மூலமாகத்தான், பள்ளியின் பல்வேறு பணிகளை பள்ளி மேலாண்மை குழுவினரால் செய்ய இயலும். அவற்றை மார்ச், 31க்குள் கணக்கு முடிக்க வேண்டி இருப்பதால், உடன் பணத்தை பள்ளியின் வங்கி கணக்கிற்கு செலுத்துதல் வேண்டும்.எனவே, இந்நிலையை போக்கி எளிமைப்படுத்துவதோடு மட்டுமன்றி, எஸ்.என்.ஏ., கணக்கு சார்பாக புகார் அளிப்பதற்கும், மாநில அளவில் ஒரு டோல் ப்ரீ எண் உருவாக்கப்பட வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.