தென்னிலை அருகே லாரி கவிழ்ந்து வடமாநில தொழிலாளர்கள் மூவர் பலி
கரூர், தென்னிலை அருகே, எம்.சாண்ட் லாரி, சாலையோரம் கவிழ்ந்ததில், வடமாநில தொழிலாளர்கள், மூவர் உயிரிழந்தனர்.கரூர் மாவட்டம், தென்னிலை கோடந்துார் பகுதியில், அரவிந்த் புளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி செயல்படுகிறது. அங்கிருந்து நேற்று காலை லாரி மூலம், எம்.சாண்ட் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. லாரியை, கரூரை சேர்ந்த சந்திரகுமார், 40, ஓட்டினார். லாரியின் மேல் பகுதியில் எம்.சாண்ட் மீது, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அஜய் பங்காரா, 30, சிக்கந்தர் கெர் கட்டா, 21, பீகார் மாநிலத்தை சேர்ந்த வித்யானந்த் பிரபாகர், 48, ஆகியோர் அமர்ந்திருந்தனர். லாரியின் உள்பகுதியில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த புல்ஜேம்ஸ் பர்வா, 31, அமர்ந்திருந்தார்.லாரி, தென்னிலை அருகே முதலி கவுண்டன்புதுார் பகுதியில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது. அப்போது, லாரியின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த அஜய் பங்காரா, சிக்கந்தர் கெர்கட்டா, வித்யானந்த் பிரபாகர் ஆகியோர் கீழே விழுந்தனர். அவர்கள் மீது, எம்.சாண்ட் கொட்டியது. அதில் சிக்கிய மூன்று பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இவர்களது உடலை பொதுமக்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.லாரி டிரைவர் சந்திரகுமார், அவருக்கு அருகில் அமர்ந்திருந்த புல்ஜேம்ஸ் பர்வா ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் இருவரும், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து, தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.