| ADDED : டிச 02, 2025 04:29 AM
மதுரை: அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் மொழித்திறன், அடிப்படை கணிதத் திறனை மேம்படுத்தும் வகையில் 'திறன்' திட்டம் ('ஸ்லோ லேர்னர்ஸ்' மாணவர்களை தனியாக பிரித்து கற்பித்தல் முறை) ஜூலையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி ஒரு வகுப்பில் சுமாராக படிக்கும் மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்துகிறேன் என்ற பெயரில் அவர்களுக்கு தனி வகுப்பறை ஒதுக்கி பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வகையில் மாநில அளவில் 10 ஆயிரத்திற்கும் மேல் 'திறன்' திட்ட மாணவர்களாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. ஒரே வகுப்பில் உள்ள மாணவர்களை கற்றல் அடைவு திறன் அடிப்படையில் சிலரை மட்டும் தனியாக பிரித்து, பயிற்சி அளிப்பது, தனி வினாத்தாள், தனித் தேர்வு நடத்துவது போன்ற செயல்பாடுகள் மாணவர் இடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் என சர்ச்சை எழுந்தது. மேலும் 'ரெகுலர்' மாணவர், 'திறன்' மாணவர் என வகுப்பறையில் அழைக்கப்பட்டதால் இது 'வகுப்பறை தீண்டாமை' போல் உள்ளது என பெற்றோர், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், இம்மாதத்திற்குள் இத்திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''திறன் மாணவருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு அவர்களை தேர்ச்சி பெற வைப்பதே இத்திட்டம் நோக்கம். 'வகுப்பறை தீண்டாமை' என கடுமையாக விமர்சனம் எழுவதால் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளது. இம்மாதம் இறுதிக்குள் 'திறன்' திட்டம் பயிற்சிகளை நிறைவு செய்ய சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டத்தை நிறுத்த கல்வித்துறை ஆலோசித்து வருகிறது,'' என்றார்.