| ADDED : நவ 14, 2025 04:36 AM
மதுரை: மதுரையில் தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு சார்பில், பிரதம மந்திரி வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான வேலைவாய்ப்புத் திட்டம் (பி.எம்.வி.பி.ஆர்.ஒய்) எனும் ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. வைப்பு நிதி மண்டல கமிஷனர் அழகியமணவாளன் பேசியதாவது: இத்திட்டத்தில், பணியில் சேரும் புதியவருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அவை பணியில் சேர்ந்து 6 மாதம் கழித்து முதல் தவணை, 12 மாதங்கள் கழித்து 2வது தவணையாக வழங்கப்படும். ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அனுபவம் இல்லாத இளைஞர்களை பணியில் அமர்த்தும் அனைத்து துறை நிறுவனங்களுக்கு முதல் 2 ஆண்டுகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதலாக 2 ஆண்டுகள் மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதில் மாதம் ரூ.10 ஆயிரத்துக்குள் சம்பளம் வழங்கும் நிறுவனங்களுக்கு ரூ.1,000, ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் வழங்கினால் ரூ.2,000, ரூ.20 ஆயிரத்துக்கு மேல் ரூ.ஒரு லட்சம் வரை சம்பளம் வழங்கினால் ரூ.3,000 வழங்கப்படும். நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயனடைய வைப்பு நிதி தளத்தில் பதிவு செய்து 2027 ஜூலை 31 வரை ஆட்களை நியமிக்கலாம். இவ்வாறு பேசினார். வைப்பு நிதி அமலாக்க அதிகாரிகள் ஹேமமாலினி, ரமணா கேசஹா, அண்ணாத்துரை, விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.