உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நெல் கொள்முதல் நிறுத்தத்தால் மறியலுக்கு தயாராகும் விவசாயிகள்

 நெல் கொள்முதல் நிறுத்தத்தால் மறியலுக்கு தயாராகும் விவசாயிகள்

சோழவந்தான்: பாலகிருஷ்ணாபுரம் மையத்தில் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் ரோடு மறியல் செய்யப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரும்பாடி ஊராட்சியில் 4 கிராமங்களுக்கு இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய 2 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. இம் மையங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்முதல் அளவு முடிந்து விட்டதால், நெல் கொள்முதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் 50க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பத்தாயிரம் நெல்மூடைகள் திறந்தவெளிகளில் குவிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பு ஏற்படும் முன் கொள்முதல் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விவசாயி பாண்டி: ஒரு வாரமாக மையம் செயல்படவில்லை. அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க இடமின்றி திறந்தவெளியில் குவித்துள்ளோம். மழை நேரத்தில் நெல்லை பாதுகாப்பதில் சிரமம் உள்ளது. ஈரப்பதத்தால் நெல்மணிகள் முளைக்க தொடங்கி விடுகின்றன. கடன் வாங்கி விவசாயம் செய்துள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்படும். வேளாண், நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை விடுத்தோம். நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சல் அடைந்துள்ளோம். இந்நிலை தொடர்ந்தால் ரோடு மறியல் செய்ய தயாராக உள்ளோம் என்றார். அதிகாரிகளிடம் கேட்டபோது, ''விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கிய மையங்களுக்கு நெல்லை கொண்டு செல்லாமல், ஒரே மையத்திற்கு கொண்டு வந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கு கலெக்டரின் ஒப்புதலை பெறும் பணிகள் நடக் கின்றன. விரைவில் கொள்முதல் பணிகளை தொடங்க ஏற்பாடு செய்வோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை