வெளிநாட்டு ஹாக்கி வீரர்கள் ரசித்த சிறப்பு ஜல்லிக்கட்டு வீரமான விளையாட்டு என வியப்பு
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் கீழக்கரையில் நடந்த உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கி வீரர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டியை வெளிநாட்டு வீரர்கள் ரசித்தனர். சென்னை, மதுரையில் 14வது உலகக்கோப்பை ஆடவர் ஜூனியர் ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் பங்கேற்று விளையாடும் வெளிநாட்டு வீரர்கள் மதுரையில் பல ஓட்டல்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு போட்டி நடத்தப்பட்டது. நேற்று கனடா, நமீபியா, ஆஸ்திரியா, சீனா, வங்காளதேசம், கொரியா, ஓமன் ஆகிய 8 நாடுகளை சேர்ந்த வீரர்கள் தமிழக பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் அழைத்து வரப்பட்டனர். அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து போட்டியை துவக்கி வைத்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்திரசேகர், ஆர்.டி.ஓ., கருணாகரன், எஸ்.பி.,அரவிந்த், வெங்கடேசன் எம்.எல்.ஏ., மாநகராட்சி கமிஷனர் சித்ரா, தாசில்தார் ராமச்சந்திரன், தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜ சேகரன் இந்திய ஹாக்கி செயலாளர் சேகர் மனோகரன், இயக்குனர் பூஷன், மாநில செயலாளர் செந்தில் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். போட்டியில் 105 காளைகள், 50 மாடுபிடி வீரர்கள், மருத்துவ பரிசோதனைக்கு பின் களம் கண்டனர். போட்டியின் போது வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள், தங்களை அடக்க பாய்ந்த வீரர்களை பறக்க விட்டன. வீரர்களும் பாய்ந்த காளைகளை பிடித்து தொங்கி அடக்க முனைந்தனர். காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையரின் தீரத்தை, வெளிநாட்டு வீரர்கள் வியந்து கைதட்டி ரசித்தனர். போட்டியில் வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர் என 13 பேர் காயமடைந்தனர். வீரர் ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
போட்டியை ரசித்த வீரர்கள் கூறியதாவது
வியப்பில் ஆழ்த்திய விளையாட்டு இந்த விளையாட்டு மிக அருமையாக இருந்தது. முரட்டுக் காளைகள், பயமே இல்லாமல் மோதிய வீரர்களை துாக்கி வீசின, விழுந்து எழுந்த வீரர்கள் மீண்டும் காளையை அடக்க முயன்ற இதுபோன்ற விளையாட்டை நான் பார்த்ததில்லை. என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்திய விளையாட்டு இது. - ரகிபுல் ஹசன் வங்கதேச வீரர் அபாயகர விளையாட்டு இந்தப் போட்டி மனிதர்களுக்கும், காளைக்கும் இடையே கடுமையானதாக உள்ளது. எனக்கு இது ஒரு அபாயகரமாக தெரிந்தாலும், விளையாட்டு என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. இதில் வீரர்கள் உயிரையும், காயங்களை பொருட்படுத்தாமல் சர்வசாதாரணமாக விளையாடுவது வியப்பளிக்கிறது. இது அவர்கள் தங்களை எந்தளவு போட்டிக்காக தயார்படுத்தி வந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது. - முகமது ஓமன் பயிற்சியாளர் வேடிக்கைதான் பார்ப்பேன் தமிழக வீரர்கள் மிகவும் வலிமையாக உள்ளனர். நாங்கள் ஹாக்கி மட்டையுடன் விளையாடுகிறோம். இவர்கள் காளையின் கூர்மையான கொம்புகளுடன் வீரமாக விளையாடுகின்றனர். இந்த வீரமான விளையாட்டை என்னால் நிச்சயமாக விளையாட முடியாது. வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடியும். தமிழர்களின் பாரம்பரிய உடையும் நன்றாக உள்ளது. - இபாபிரிஸ்டா நமிபியா வீரர்