| ADDED : டிச 02, 2025 04:30 AM
மதுரை: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் டிச., 8 வரை நடக்கும் ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி லீக் போட்டிகளுக்கான இலவச ஆன்லைன் டிக்கெட்கள் கிடைக்காமல் தென்மாவட்ட ஹாக்கி வீரர்கள், ரசிகர்கள் ஏமாற்றமடைகின்றனர். தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஹாக்கி வீரர்கள், ரசிகர்கள் உலகக்கோப்பை போட்டிகளை ரசிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஹாக்கி இந்தியா தான் இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகக்கோப்பைக்கான டிக்கெட் என்பதால் சர்வதேச தரத்திற்கு இந்த செயலி மூலம் ஒருவர் ஒரே நேரத்தில் 4 டிக்கெட்கள் பதிய முடியும். ஒரு குடும்பத்தில் உள்ள நான்கு பேர் நான்கு அலைபேசி மூலம் ஆன்லைனில் பதிந்தால் 16 டிக்கெட்களை கட்டணமின்றி முன்கூட்டியே ஒதுக்க (ரிசர்வ்) முடியும். காலி இருக்கைகள் மொத்த தற்காலிக பார்வையாளர்களின் எண்ணிக்கை 1200 ஆக இருந்தாலும் அதில் பாதியளவு பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்காக மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ள டிக்கெட்டில் மொத்தமாக ஒருசிலரே பதிவு செய்வதால், செயலியில் டிக்கெட் இருக்கைகள் விற்று விட்டதாக காட்டுகிறது. ஆன்லைன் டிக்கெட் எடுத்த அனைவருமே போட்டியை பார்க்க வராததால் நவ., 28 முதல்நாள் போட்டியைத் தவிர மற்ற நாட்களில் 60 சதவீத இருக்கைகள் காலியாக உள்ளன. அதேநேரத்தில் உண்மையான ஹாக்கி ரசிகர்கள், வீரர்கள் ஆன்லைன் டிக்கெட் கிடைக்காமல் போலீசார் அனுமதியின்றி உள்ளே நுழைய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். டிக்கெட் கவுன்டர் தேவை மதுரையில் சர்வதேச தரத்தில் அமைந்துள்ள ஹாக்கி அரங்கை பார்ப்பதும், அதில் உலகக்கோப்பை போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதை பார்ப்பதும் தென்மாவட்ட ஹாக்கி வீரர்கள், ரசிகர்களின் கனவாக உள்ளது. விளையாட்டை பார்க்க வராதவர்கள் அதிகளவில் ஆன்லைனில் பதிந்துள்ளதால் உண்மையான வீரர்களும், ரசிகர்களும் ஆன்லைனில் பதிய முடியாமல் தினந்தோறும் நேரில் வந்து ஏமாற்றமடைகின்றனர். ஆன்லைன் டிக்கெட் மட்டும் வழங்காமல் நேரடியாக வரும் ரசிகர்கள், ஹாக்கி வீரர்களுக்கு அங்கேயே டிக்கெட் கவுன்டர் அமைத்து இலவச டிக்கெட் வழங்க வேண்டும். வழக்கமான போலீஸ் பரிசோதனைகளுடன் இம்முறையை கொண்டு வந்தால் உண்மையான ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் போட்டியை ரசிப்பார்கள். இன்று அவசியம் இன்று (டிச.,2) இரவு 8:00 மணிக்கு இந்திய அணியும், ஸ்விட்சர்லாந்து அணியும் மோதுகின்றன. எனவே தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உடனடி டிக்கெட் கவுன்டருக்கு ஏற்பாடு செய்தால் பார்வையாளர்கள் இருக்கை முழுவதும் நிரம்பும். ரசிகர்கள் ஒவ்வொரு கோலுக்கும் உற்சாகப்படுத்தும் போது இந்திய அணி வீரர்களுக்கு உத்வேகம் கிடைக்கும்.