UPDATED : நவ 14, 2025 05:30 AM | ADDED : நவ 14, 2025 04:31 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை சர்க்கரை நோய்ப்பிரிவின் சார்பில், பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் உடற்பருமனுடன் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமிருப்பது கண்டறியப்பட்டது. சர்க்கரை நோய்ப் பிரிவின் கீழ் டாக்டர் சுப்பையா தலைமையில் மதுரையில் கிராம, நகர்ப்புறத்தில் உள்ள நான்கு பள்ளிகளைச் சேர்ந்த 10 முதல் 18 வயதுக்குட்பட்ட 3195 மாணவர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். ஆய்வு முடிவுகளில் நகர்ப்பகுதியைச் சேர்ந்த 8.8 சதவீதம் பேருக்கும், கிராமப்பகுதிகளில் 7.6 சதவீதம் பேருக்கும் உடற்பருமன் பாதிப்பு கண்டறியப்பட்டதாக டீன் அருள் சுந்தரேஷ்குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சரியான உடல் எடையில் இருந்த மாணவர்களுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இல்லை. பருமனாக உள்ள மாணவர்களில் 18 சதவீதம் பேருக்கு உயர் ரத்த சர்க்கரை அளவு (ஐ.ஜி.டி.,) கண்டறியப்பட்டது. இதில் 2 சதவீதம் பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருந்தது. 40 சதவீதம் பேருக்கு கல்லீரல் கொழுப்பு, 34 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம், 20 சதவீதம் பேருக்கு உயர் கொலஸ்ட்ரால் அளவு கண்டறியப்பட்டது. பருமனாக உள்ள 31 சதவீத மாணவிகளுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் இருந்தன. அச்சுறுத்தும் உடற்பருமன் அதிக கலோரியுள்ள நொறுக்குத் தீனிகள், விளையாட்டு, உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இல்லாதது, அதிக நேரம் டிவி, அலைபேசி பார்ப்பதே உடற்பருமனுக்கான அடிப்படை காரணங்கள். பிறப்பின் போதே அதிக எடை, பெற்றோரிடம் சர்க்கரை நோய் இருப்பது ஆகியவை சர்க்கரை நோய், இதர நோய் வருவதற்கான காரணங்கள். மருத்துவமனையின் சர்க்கரை நோய்ப்பிரிவின் கீழ் கண்டறிந்த ஆய்வுக்கட்டுரையை சர்வதேச மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளோம். தற்போது வரை அரசு மருத்துவமனை சர்க்கரை நோய்ப்பிரிவில் 75 ஆயிரம் பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்றார்.