உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மீட்ட கொத்தடிமைகளின் மறுவாழ்வு என்னாச்சு மூன்றாண்டாகியும் மீளமுடியாமல் தவிப்பு

 மீட்ட கொத்தடிமைகளின் மறுவாழ்வு என்னாச்சு மூன்றாண்டாகியும் மீளமுடியாமல் தவிப்பு

மேலுார்: கொத்தடிமைகளாக இருந்த புலிப்பட்டியைச் சேர்ந்த 15 பேரை மீட்ட அரசு அதிகாரிகள், அவர்களின் மறு வாழ்வுக்கு வழிகாணாததால், அரசின் திட்டங்கள், மீட்கப்பட்டோர் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. மேலுார், புலிப்பட்டி முத்து கருப்பன், அவரது உறவினர்கள் 15 பேர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் செங்கல் சூளையில் 7 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக பணியாற்றினர். 2023ல் தேவகோட்டை ஆர்.டி.ஓ., பால்துரை 15 பேரை மீட்டு விடுதலைச் சான்று வழங்கினார். அவர்களை மேலுார் வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தார். மீட்கப்பட்ட அவர்களுக்கு வீடு இல்லாததால், புலிப்பட்டியில் சிதிலமடைந்த சமுதாயக்கூடத்தில் தங்க வைத்தனர். பொதுவாக கொத்தடிமைகளை மீட்டால், கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு நிதி, விடியல் திட்டத்தில் மீட்கப்பட்டோருக்கு மத்திய, மாநில அரசுகள் கல்வி, வாழ்வாதார வசதிகளை வழங்க வேண்டும் என்று விதி உள்ளது. அவற்றை இந்தத் தொழிலாளர்களுக்கு வழங்காதது அரசின் கொத்தடிமை திட்டத்தையே கேள்விக்குறியாகி உள்ளது. மீட்கப்பட்ட விஜயசாந்தி கூறியதாவது : மூன்று ஆண்டுகளாக மறுவாழ்வு, நலத்திட்ட உதவிகள் கிடைக்கவில்லை. ரேஷன் கார்டும் இல்லாமல் அரிசி கிடைக்காமல் சாப்பாடுக்கு திண்டாடுகிறோம். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. அரசு ஆவணங்கள் இல்லாததால் குழந்தையை பள்ளியில் சேர்க்க முடியவில்லை. தாசில்தாரிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் ரேஷன் கார்டு, ஜாதி, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, வீடு பட்டா வழங்க வேண்டும். எங்களை மீட்ட அரசு அதிகாரிகள் வாழ்வாதாரத்திற்கு உதவாததால், மீட்டபின்பும் 3 ஆண்டுகளாக கொத்தடிமையாகவே உணர்கிறோம், என்றார். தாசில்தார் செந்தாமரை கூறுகையில், ''மீட்கப்பட்டோர் விபரம் தற்போதுதான் தெரிய வருவதால் அவர்களின் தேவை உடனே சரிசெய்து தரப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை