நாமகிரிப்பேட்டை,'டிட்வா' புயலால், நாமக்கல் மாவட்டத்தில், சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று, மழை குறைந்து வெயில் அடிக்க தொடங்கியதால், விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்கினர். இதையொட்டி, மத்திய பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள், குடும்பத்துடன் நாமகிரிப்பேட்டை பகுதியில் பிழைப்பு தேடி வந்துள்ளனர். அவர்கள், கை தொழிலாக, பழைய இரும்புகளை உருக்கி, தட்டி வேளாண் உபகரணங்களை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர். நாமகிரிப்பேட்டை-ஆத்துார் பிரதான சாலை, சந்தை அருகே இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகள் கொண்டு வரும் பழைய கத்தி, கொடுவாள், மம்முட்டி, கதிர் அரிவாள் ஆகியவற்றை சீர்படுத்தி கொடுக்கின்றனர். மேலும், இரும்பு உருட்டு, இரும்பு பட்டைகளை கொடுத்தாலும் மம்முட்டி, கத்தி, கொடுவாள், அரிவாள் உள்ளிட்ட உபகரணங்களை, கண் முன்பே செய்து கொடுக்கின்றனர். இதற்காக, 200 முதல், 1,000 ரூபாய் வரை கூலி வாங்கி கொள்கின்றனர். நாமகிரிப்பேட்டையில், விவசாயிகள் அதிகளவு வேளாண் உபகரணங்களை செய்து வாங்கி சென்றனர்.