உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் பிளஸ்-2 தேர்வை எழுதும்... 6,158 மாணவர்கள்...!பணியில் 531 ஆசிரியர்கள் நியமனம்

நீலகிரியில் பிளஸ்-2 தேர்வை எழுதும்... 6,158 மாணவர்கள்...!பணியில் 531 ஆசிரியர்கள் நியமனம்

ஊட்டி:நீலகிரி கல்வி மாவட்டத்தில், 41 மையங்களில், 6158 மாணவ, மாணவிகள் 'பிளஸ்-2' பொது தேர்வு எழுதுகின்றனர்; பணியில், 531 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு தேதிகள் விபரம்:

நீலகிரி கல்வி மாவட்டத்தில் இன்று, (1ம் தேதி) முதல் பிளஸ்----2 பொது தேர்வு துவங்குகிறது. அதன்படி, 1ம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடக்கிறது. 5ம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு; 8ம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது. 11ம் தேதி, வேதியியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடக்கிறது. 15ம் தேதி, கணினி, இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகிறது.கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, 'டெக்ஸ்டைல் அண்ட் டிரஸ் டிசைனிங்' உள்ளிட்ட பாடத்தின் பொது தேர்வுகள்,19ம் தேதி நடக்கிறது. உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள், 22ம் தேதி நடக்கிறது.

தேர்வு பணியில் 531 ஆசிரியர்கள்

நீலகிரியில் இத்தேர்வை, 2,820 மாணவர்கள், 3,338 மாணவிகள் என, மொத்தம், 6,158 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். 41 மையங்களில் தேர்வு நடக்கிறது. இதில், '43 முதன்மை கண்காணிப்பாளர்கள்; 41 துறை அலுவலர்கள்; 82 அலுவலக பணியாளர்கள்; 350 அறை கண்காணிப்பாளர்கள்; வினாத்தாள் கொண்டு செல்ல, 15 வழித்தட அலுவலர்கள்,' என, மொத்தம், 531 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல், தேர்வுஅறைக்குள் மாணவர்கள் மொபைல் போன், மின்சாதனங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் கண்காணிக்க, 50 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்,'' என்றார்.

உயருமா தேர்ச்சி சதவீதம்?

கடந்த, 2022 ம் ஆண்டு பிளஸ்-2 பொது தேர்வில், மாநில அளவில் மாவட்டம் வாரியாக, நீலகிரி கல்வி மாவட்டம், 12 ம் இடத்தில் இருந்தது. 2023 ம் ஆண்டு பிளஸ்-2 பொது தேர்வில், தேர்ச்சி விகிதம் சரிந்து, 32 ம் இடத்திற்கு சென்றது. இந்த தேர்ச்சி வகிதம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆய்வு மேற்கொண்ட கல்வி துறை, முக்கிய பாட பிரிவு ஆசிரியர்களை மாற்றியது. தேர்ச்சி விகிதம் சரிந்ததை பார்த்து கலெக்டரும் வருத்தம் தெரிவித்தார். 'நடப்பாண்டு தேர்ச்சி விகிதம் கண்டிப்பாக உயர்த்த வேண்டும்,' என, கல்வி துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ