தனியார் இடத்தில் பாறை உடைப்பதால் சர்ச்சை : விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஊட்டி: 'ஊட்டி அருகே, ஹாரனி ஹவுஸ் பகுதியில் தனியார் நிலத்தில் பாறைகள் உடைக்கப்படுவதில் விதிமீறல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரியின் சுற்றுசூழலை பாதுகாக்கும் நோக்கில் வெடி வைத்து பாறைகள் உடைக்க தடை உள்ளது. சில பகுதிகளில் வீடு கட்டுவதாகவும், விளை நிலங்களுக்கு இடையூறுள்ள பாறைகளை அகற்றுவதாக கூறி அனுமதி வாங்கி, விதி மீறலில் ஈடுபடும் செயல்களும் சில பகுதிகளில் நடந்து வருகிறது. கண்காணித்து தடுக்க வேண்டிய வருவாய் துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட ஹாரனிஹவுஸ் பகுதியில் உள்ள காலி இடத்தில் பாறை ஆங்காங்கே உள்ளன. அங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உளி உள்ளிட்ட உபகரணங்கள் வாயிலாக பாறை உடைத்து வருகின்றனர். உடைக்கப்பட்ட பாறை கற்கள் அப்பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'ஹாரனி அவுஸ் பகுதியில் தனியார் நிலத்தில் ஏராளமான தொழிலாளர்களை கொண்டு பாறை உடைக்கப்பட்டு வருகிறது. சில நாட்களாக இங்கு அவ்வப்போது, இரவு நேரங்களில் நடந்து வரும் பணியால் சந்தேகம் எழுந்துள்ளது. வருவாய் துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர் ஊட்டி தாசில்தார் சங்கர் கணேஷ் கூறுகையில்,''ஹாரனிஹவுஸ் பகுதியில் பாறை உடைப்பு விவகாரத்தில், மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் பணி முடிக்கவில்லை. மீண்டும் குறிப்பிட்ட நாளுக்கு அனுமதி வாங்கி வேலை செய்கின்றனர். அதில், இரவில் பணி செய்வது, வெடி பொருட்கள் பயன்படுத்துவது போன்ற விதிமீறல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.