உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இயற்கை விவசாயத்தில் பழ சாகுபடி செய்யுங்கள்; விவசாயிகளுக்கு அழைப்பு

 இயற்கை விவசாயத்தில் பழ சாகுபடி செய்யுங்கள்; விவசாயிகளுக்கு அழைப்பு

குன்னுார்: 'இயற்கை விவசாயத்தில் பழ சாகுபடி செய்து, உணவு உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டும்,' என, கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. குன்னுார் உபாசி அரங்கில் தோட்டக்கலை துறை சார்பில், தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான பழ பயிர் சாகுபடி கருத்தரங்கு நடந்தது.இணை இயக்குனர் சிபிலாமேரி தலைமை வகித்தார். தோட்டக்கலை உதவி இயக்குனர் விஜயலட்சுமி பேசுகையில்,''தற்போது பழ பயிர்கள் சாகுபடி குறைந்துள்ள நிலையில், விவசாயிகள் பழ பயிர்கள் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் ஏற்கனவே சாகுபடியில் உள்ள பழ மரங்களை புதுப்பிக்கும் தொழில்நுட்பங்களை விவசாயிகள் கற்று பழபயிர் சாகுபடியை மேற்கொண்டு பயனடைய வேண்டும்,'' என்றார். தோட்டக்கலை அலுவலர் மோகன் குமார் பேசுகையில்,''பழ பயிர்கள் சாகுபடி புதுப்பித்தல் குறித்த தொழில்நுட்பம் அனைவரும் அறிந்து செயல்படுத்த வேண்டும். அரசு பழ பண்ணையில் விற்பனைக்கு தயாராக உள்ள நாற்றுக்களை வாங்கி பயன்பெறலாம்,'' என்றார். குன்னுார் பழ வியாபாரி ஈஸ்வரன் பேசுகையில்,''தற்போது அழியக்கூடிய நிலையில் உள்ள நீலகிரியின் பாரம்பரிய பழ வகைகளான ஊசிபழம், முள்ளு பழம், தவிட்டு பழம், லக்கோட்டா, குரங்கபழம், விக்கி, ஊட்டி ஆரஞ்சு போன்ற பழ வகைகளை புதுப்பித்து சாகுபடி செய்ய வேண்டும்,'' என்றார். ஈசா யோகா மையம் விரிவாக்க அலுவலர் சேகர் பேசுகையில், ''இயற்கை விவசாயத்தில் பழ மரங்களை சாகுபடி செய்து உணவு உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டும். அங்கக வேளாண்மை பயன்படுத்தி நோயில்லாத வாழ்க்கையை வாழ வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியை கவிதா, முன்னோடி விவசாயிகள் குமரகுரு, சிவக்குமார் ஆகியோர், பழ சாகுபடியால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினர். தொடர்ந்து, உலிக்கல் பகுதியில் உள்ள ஜெஸ்ரேல் பழ பண்ணைக்கு விவசாயிகள் கள ஆய்வுக்கு அழைத்து செல்லப்பட்டு நேரடியாக பழ சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. ஆரஞ்சு பழ பண் ணையில் பழ சாகுபடி முறைகள் குறித்து பண்ணை நிறுவனர் ஜெயந்தி பிரேம்குமார் விளக்கினார். ஏற்பாடுகளை, துணை தோட்டக்கலை அலுவலர் கிருஷ்ணன், தோட்டக்கலை அலுவலர்கள், அட்மா திட்ட மேலாளர்கள் செய்தனர். வட்டார தோட்டக்கலை அலுவலர் பிரியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை