குப்பை குவியலால் நோய் தொற்று அபாயம்
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் தொட்டியில் கொட்டப்பட்ட குப்பைகள், அப்புறப்படுத்தாமல் உள்ளதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. கோத்தகிரி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த ஏதுவாக, அனைத்து பகுதிகளிலும் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில், மட்கும், மட்காத குப்பை தனித்தனியாக கொட்ட அறிவுறுத்தப்படுகிறது. சமீப காலமாக, கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், குப்பைகள் சரியாக கையாளப்படுவதில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. கோத்தகிரி கோடநாடு சாலையில், கேர்பெட்டா பகுதியிலும், அரவேனு அருகே, மூணு ரோடு பகுதியிலும், குப்பை தொட்டிகளில் கொட்டப்பட்ட குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் உள்ளன. இதனால், குப்பைகள் சிதறி கிடக்கிறது. துர்நாற்றத்துடன், கொசு தொல்லை அதிகரித்து, பொது மக்களுக்கு நோய் தொற்று அபாயம் அதிகரித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நிர்வாகம், குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.