உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்படாததால் கடும் அதிருப்தி! கடந்த ஆட்சியில் திறப்புவிழா கண்டும் நடவடிக்கையில்லை

கூடலுார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்படாததால் கடும் அதிருப்தி! கடந்த ஆட்சியில் திறப்புவிழா கண்டும் நடவடிக்கையில்லை

கூடலுார்: கூடலுாரில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் துவங்குவதற்காக கட்டப்பட்ட கட்டடம் பயனின்றி கிடப்பதால், ஆசிரியர் கனவுடன் படித்து வரும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கூடலுார், பந்தலுார் பகுதிகளில், 'எஸ்டேட் தொழிலாளர்கள், சிறு தேயிலை விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், பழங்குடியினர்,' என, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்களின், பலர் ஆசிரியராகும் கனவில் கல்வி பயின்று வருகின்றனர். அதற்கான பொருளாதார வசதி இல்லாததால், பலரும் வெளியூர்சென்று ஆசிரியர் பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 3.5 கோடி ரூபாய் செலவில், ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் கட்ட பணிகள் துவங்கப்பட்டு, 2017ல் நிறைவு பெற்றது. 2020ல் நடந்த திறப்பு விழா பணிகள் முடிந்து மூன்று ஆண்டு இடைவெளிக்கு பின், 2020 மே 28ம் தேதி, அன்றைய முதல்வர் பழனிசாமி கட்டடத்தை திறந்து வைத்தார். கட்டடம் திறக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் பயன்பாட்டுக்கு வரவில்லை. ஆசிரியர் கனவுகளுடன் படித்த தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.தற்போது, கட்டடம் மற்றும் அதன் சுற்றுப்புறம் பராமரிப்பின்றி பயனற்ற நிலையில் உள்ளது. ஆசிரியர் கனவுடன் இப்பகுதியில் உள்ள பல மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தை, அரசு உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி உள்ளனர்.

மாணவர்கள் ஏமாற்றம்

உள்ளூர் கல்வியாளர்கள் கூறுகையில், 'பிளஸ்-2 முடித்த மாணவர்கள், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பட்டய படிப்பு முடித்தால், அவர்கள், 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். கூடலூர் மாணவர்கள் இப்பயிற்சியை பெற முழுமையான கட்டட வசதிகள் இருந்தும், ஒன்றிய ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. கட்டடம் பயனற்ற நிலைக்கு மாறி வருகிறது. மாணவர்களின் ஆசிரியர் கனவை நிறைவேற்றும் வகையில், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தை, உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர, மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை