| ADDED : டிச 02, 2025 04:50 AM
திருவாடானை: மழை பெய்வதால் மின் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வீடுகளில் மின் சாதனங்கள் பாதுகாப்பாக இருக்க மின்வாரிய அலுவலர்கள் அறிவுரை கூறினர். தொண்டி பேரூராட்சி துணை தலைவர் அழகுராணியின் கணவர் ராஜேந்திரன். தி.மு.க., பிரமுகரான இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டு சுவர் கம்பி கதவை திறந்த போது மின்சாரம் பாய்ந்து இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மழை பெய்து ஈரமாக இருந்த போது கம்பி கதவில் மின் கசிவு இருந்ததால் இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், மழையின் போது வீடுகளில் மின் சாதனங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏதேனும் மின் இணைப்புகள் அல்லது கம்பிகளில் சிக்கல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இடி அல்லது மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், அலைபேசியை பயன்படுத்தக்கூடாது. குளியலறை, கழிப்பறை மற்றும் ஈரமான இடங்களிலும் சுவிட்சுகளைப் பொருத்தக்கூடாது என்றனர்.