உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  வங்கியின் சேவை குறைபாடு ரூ.1 லட்சம் இழப்பீடு உத்தரவு

 வங்கியின் சேவை குறைபாடு ரூ.1 லட்சம் இழப்பீடு உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஏ.டி.எம்.,ல் பணம் வராமல் எடுத்தாக குறுஞ்செய்தி வந்ததற்கு வங்கி முறையாக பதில் அளிக்காததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. ராமநாதபுரம் பட்டணம்காத்தான் மீனாட்சி நகரை சேர்ந்தவர் நாகலெட்சுமி. இவர் எஸ்.பி.ஐ., வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் 2020 பிப்.,7ல் பாரதிநகரில் உள்ள எச்.டி.எப்.சி., வங்கி ஏ.டி.எம்.,ல் ரூ.10 ஆயிரம் எடுக்க சென்றுள்ளார். இரு முறை முயற்சித்தும் பணம் வரவில்லை. மறுநாள் மீண்டும் முயற்சித்த போதும் பணம் வரவில்லை. ஆனால் கணக்கில் இருந்து 4 முறை ரூ.10 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. உடனே எஸ்.பி.ஐ., எச்.டி.எப்.சி., வங்கிகளில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரை விசாரித்த வங்கி குறைதீர்ப்பு அதிகாரி பணம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன் பின் பணம் திரும்ப வரவு வைக்கப்படாததால் ராமநாதபுரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2022ல் புகார் மனு அளித்தார். இதனை விசாரித்த ஆணையத் தலைவர் பி.பாலசுப்பிரமணியம், உறுப்பினர் சா.குட்வின் சாலமோன் ராஜ், வங்கி, சேவை குறைபாடு செய்துள்ளதாக தீர்ப்பளித்தனர். மனுதாரரின் வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.40,071 திரும்ப வழங்க வேண்டும். முறையாக பதில் அளிக்காமல் சேவை குறைபாடு செய்ததற்கு ரூ.25,000, பணம் எடுத்ததற்கான ஏ.டி.எம்., கண்காணிப்பு கேமரா பதிவுகளை வழங்காததற்கு ரூ.75,000 என ரூ.1 லட்சம் இழப்பீடு வேண்டும். மேலும் வழக்கு செலவுக்கு ரூ.10,000 இரு வங்கிகளும் வழங்க வேண்டும். தீர்ப்பு வழங்கிய 60 நாட்களுக்குள் செலுத்தவில்லை எனில் ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை