| ADDED : நவ 14, 2025 04:07 AM
பரமக்குடி: பரமக்குடி நகர் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டுகள் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலை தொடர வேண்டுமென மக்கள் கூறினர். பரமக்குடி நகராட்சியில் மதுரை, ராமநாதபுரம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் செல்கிறது. மணிநகர் துவங்கி ஓட்ட பாலம், ஐந்து முனை, ஆர்ச், பஸ் ஸ்டாண்ட், ஐ.டி.ஐ., வரை பிளக்ஸ் போர்டுகளை இருபுறமும் வைக்கின்றனர். வணிக நிறுவனங்கள், வீட்டு விசேஷங்கள் மற்றும் கண்ணீர் அஞ்சலி போர்டுகள் அணி வகுக்கிறது. வைகை ஆறு சர்வீஸ் ரோடு உட்பட முக்கிய சந்திப்பு இடங்களில் விளம்பர போர்டுகள் அதிகரித்துள்ளது. எச்சரிக்கை பலகைகளை மறைத்தும், எதிரெதிர் செல்லும் வாகனங்கள் கண்ணில் தெரியாத படியும் போர்டுகள் அணிவகுக்கின்றன. இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. மழை மற்றும் காற்றின் வேகத்தால் போர்டுகள் சாய்வதால் விபத்துக்கள் நடப்பதும் தொடர்கிறது. எனவே நெடுஞ்சாலை, நகராட்சி, போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் என ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு பிளக்ஸ் போர்டுகளை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.