உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  நாகை, காரைக்கால் மீனவர்கள் தொண்டி கடல் பகுதியில் அத்துமீறல் நாட்டுபடகு மீனவர்கள் கவலை 

 நாகை, காரைக்கால் மீனவர்கள் தொண்டி கடல் பகுதியில் அத்துமீறல் நாட்டுபடகு மீனவர்கள் கவலை 

தொண்டி: நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் தொண்டி பகுதியில் மீன்பிடிப்பதால் பாதிப்பு ஏற்படுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்தனர். நாகை, காரைக்கால் மீனவர்கள் அத்துமீறி தொண்டி கடல் பகுதியில் மீன்பிடிப்பதால் தொண்டி பகுதி மீனவர்களுக்கு மீன்கள் கிடைக்காமலும், இலங்கை கடற்படை கைதுக்கு ஆளாகவும் நேரிடுகிறது. எனவே அத்துமீறும் நாகை, காரைக்கால் மீனவர்களை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாட்டுப்படகு மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக நாட்டுப்படகு மீனவர் சங்க மாநில பொருளாளர் நம்புதாளை ஆறுமுகம் கூறியதாவது: நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மீனவர்கள் விசைப்படகுகளில் அரிவலைகளை பயன்படுத்துவதால் மீன் வளர்ச்சிக்கு ஆதாரமான கடல்பாசி, பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் அனைத்தும் வாரி அள்ளப்படுகிறது. இதனால் மீன் வளம் பாதிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த கடல் பகுதியில் மீன் இனங்களே இருக்காது. கடந்த ஒரு வாரத்திற்குள் மட்டும் ரூ. 50 லட்சம் மதிப்பிலான வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரிவலையை பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் மீன்வளமே கேள்விக்குறியாகிவிடும். அப்பகுதி மீனவர்கள் இரும்பால் ஆன படகை பயன்படுத்துகின்றனர். மற்ற படகுகளில் மோதினால் நொறுங்கி விடும். இதனால் நாங்கள் யாரும் அருகே செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளோம். கடற்படை வீரர்களே அந்த படகுகளுக்கு அருகில் செல்லாமல் உள்ளனர். எனவே தொண்டி பகுதியில் நாகை, காரைக்கால் மீனவர்கள் அத்துமீறலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., கருமாணிக்கத்திடம் மனு கொடுத்துள்ளோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி