உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  டிட்வா புயலால் வீடுகளை சூழ்ந்த நீர்; ராமேஸ்வரத்தில் மக்கள் படகில் பயணம்

 டிட்வா புயலால் வீடுகளை சூழ்ந்த நீர்; ராமேஸ்வரத்தில் மக்கள் படகில் பயணம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், 'டிட்வா' புயலால் கொட்டி தீர்த்த மழையால், மழைநீர் வெளியேறாமல் வீடுகளை சுற்றி தேங்கியிருப்பதால், மக்கள் படகில் செல்லும் நிலை உள்ளது. 'டிட்வா' புயலால் நவ., 28, 29ல் கனமழை பெய்ததால் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில், 200 வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பலரும் வீடுகளில் இருந்து பீரோ, பேன் என, உடைமைகளை லாரியில் ஏற்றி வெளியேறினர். இரண்டாம் நாளான நேற்று, ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவில் ஏராளமான வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால், மக்களை வருவாய் துறையினர் வெளியேற்றி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள கோவில் விடுதியில் தங்க வைத்தனர். மேலும், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம், ராஜாநகரில் மழைநீர் வீடுகளை சூழ்ந்ததால் உறவினர் வீட்டில் தங்கி இருந்த மக்கள் நேற்று தெர்மாகோல் படகில் சென்று வீடுகளை பார்வையிட்டு, முக்கிய ஆவணங்கள், உடைமைகளை சேகரித்து மீண்டும் உறவினர் வீடுகளுக்கு திரும்பினர். மழைநீர் செல்லும் வழித்தடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் உருவானதால், மழைநீரை வெளியேற்ற முடியாமல் நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் பெரிதும் சிரமப்படுகின்றனர். புயல் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில், மூன்று நாட்களாக பெய்த மழையால், 15,000 ஏக்கர் அளவிலான நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. வயல்களில் தேங்கிய மழைநீர் வடிவதற்கு ஏதுவாக, கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டதால், தண்ணீர் வேகமாக வடிந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை