உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பெரிய கண்மாயில் நீர்மட்டம் உயர்வு

 பெரிய கண்மாயில் நீர்மட்டம் உயர்வு

ஆர்.எஸ்.மங்கலம்: மழை நீர் வரத்தால் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்ற சிறப்பு பெயர் பெற்றது ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய். இந்த கண்மாயில் தேக்கப்படும் 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கண்மாயில் கடந்த மாதம் இரண்டடி தண்ணீர் தேங்கி இருந்தது. அதைத்தொடர்ந்து நிலவிய வறட்சியால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் கண்மாயில் தண்ணீர் காலி ஆகியது. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர். இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாவட்டத்தில் மழை பெய்ததை தொடர்ந்து பெரிய கண்மாயில் மழை நீர்வரத்தால் தற்போது 1.5 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. முற்றிலும் தண்ணீர் காலியாக இருந்த நிலையில் கண்மாயில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் தற்போது கண்மாயில் உள்ள தண்ணீரை மட்டும் பயன்படுத்தி முழுமையான நெல் விவசாயத்தை பெற முடியாத நிலையில் பாசன விவசாயிகள் உள்ளதால் வைகை அணையில் இருந்து பெரிய கண்மாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்