அரசு மருத்துவமனை வளாகத்தில் குரங்குகள் அட்டகாசத்தால் அவதி
காரைக்குடி: காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், குரங்குகள் அட்டகாசத்தால் நோயாளிகள் அச்சத்தில் உள்ளனர். காரைக்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். மாதத்திற்கு 250-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெறுகிறது. இங்கு, மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை, ரத்த வங்கி, சிடி ஸ்கேன், டயாலிசிஸ், காது மூக்கு தொண்டை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த சிலர் தினங்களாக கூட்டம் கூட்டமாய் குரங்குகள் சுற்றித் திரிகின்றன. நோயாளிகள் மற்றும் உறவினர்கள் கொண்டு வரும் பொருட்களை குரங்குகள் எடுத்துச் செல்கின்றன. குரங்குகளைப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.