திருப்புவனத்தில் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
திருப்புவனம்: திருப்புவனத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் பாலிதீன் பயன்பாடு காரணமாக சுற்றுப்புற சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2019 முதல் பாலீதின் பைகள், கவர்கள், டம்பளர்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 50 மைக்ரான்களுக்கு குறைவான பைகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் 2023ல் 120 மைக்ரான்களுக்கு குறைவான பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் திருப்புவனத்தில் தடைகளை மீறி பெரும்பாலான கடைகளில் பாலிதீன் பைகள் தாராளமாக பயன்படுத்தப்படுகின்றன. பூ கடைகள், பழ கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் கேரி பைகள் தடையை மீறி பயன்படுத்தப்படுகின்றன. பூ கடைகளில் கேரி பைகளில் பூக்களை கொட்டி வைத்து ரோட்டிலேயே வியாபாரம் செய்கின்றனர். தடையை மீறி டீ கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் சூடான டீயை ஊற்றி விற்பனை செய்து வருகின்றனர். ஓட்டல்களில் இட்லி, பரோட்டா உள்ளிட்டவைகள் சூடாக பிளாஸ்டிக் பேப்பர்களை விரித்து வைத்து பார்சல்கள் செய்து தருகின்றனர். தினசரி திருப்புவனத்தில் ஆறு டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அதில் 50 சதவிகிதம் பிளாஸ்டிக் கேரி பைகள் தான் இதனால் குப்பைகளை அழிக்க முடியாமல் பேரூராட்சி ஊழியர்கள் திணறி வருகின்றனர். தடையை மீறி பிளாஸ்டிக் கேரி பைகள் விற்பனை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 100, 200 ரூபாய் மட்டுமே அபராதம் விதிக்கின்றனர். இதனால் பலரும் தடையை மீறி பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், டம்ளர்கள் விற்பனை செய்கின்றனர்.