மேலும் செய்திகள்
அரசு பஸ்சை விரட்டிய தனியார் பஸ்; பயந்து ஓடிய மாணவர்கள்
6 minutes ago
கும்பாபிஷேகம்
22 hour(s) ago
மாட்டு வண்டி பந்தயம்
22 hour(s) ago
காரைக்குடி நபரிடம் ரூ.93 ஆயிரம் மோசடி
22 hour(s) ago
மானாமதுரை: விபத்தில் சிக்கும் அரசு பஸ்களால் பயணிகள் பலர் பலியாகி வருவது தொடர்கிறது. விபத்தை தடுக்க அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தில் தற்போது 22,500க்கு மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 10 ஆயிரம் பஸ்கள் டவுன் பஸ்களாகவும்,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் புறநகர் பஸ்களாகவும் இயக்கப்படுகின்றன. பஸ்களை பராமரிக்க டெப்போக்களில் போதிய மெக்கானிக் இல்லாத காரணத்தினால் பெரும்பாலான பஸ்கள் பழுதுடனேயே இயக்கப்படுவதால் ஆங்காங்கே விபத்துக்கள் ஏற்படுகிறது. டிரைவர்கள் பற்றாக்குறை சில வருடங்களாக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றிய டிரைவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு பதிலாக நன்கு பயிற்சி பெற்ற புதிய டிரைவர்கள் நியமனம் செய்யப்படாமல் தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்குவதால் பெரும்பாலான விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதேபோன்று முறையான பயிற்சி இல்லாமல் தற்காலிக டிரைவர் ஒருவரால் இயக்கப்பட்ட பஸ் தான் நேற்று முன்தினம் திருப்புத்துார் அருகே கும்மங்குடி பகுதியில் விபத்தை ஏற்படுத்தியதால் 9 பெண்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக பலியாகினர். 40 பேர் படுகாயம் அடைந்தனர். நேற்று கூட செங்கல்பட்டு கல்பாக்கம் அருகே குன்னத்துார் என்ற இடத்தில் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு பஸ் மோதி வேனில் சென்ற 2 பெண் தொழிலாளர்கள் பலியாகினர்.10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பழுது பார்ப்பதில்லை அரசு டிரைவர், கண்டக்டர்கள் கூறியதாவது: இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்களில் பழுது ஏற்பட்டால் அதனை சரி செய்ய உரிய மெக்கானிக் இல்லை. உதிரி பாகங்கள் போதிய அளவில் இல்லாததால் பஸ்கள் பழுதானாலும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. பழுது இருப்பது குறித்து அந்தந்த கிளை அலுவலகங்களில் தெரிவித்தால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுப்பது கிடையாது. பொருத்தப்படும் உதிரி பாகங்களும் தரமற்று இருப்பதால் சில நாட்களிலேயே மீண்டும் பழுது ஏற்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான பஸ்களில் டயர் மிகவும் மோசமான நிலையில் டயர் வெடிப்பதாலும் பஸ்கள் விபத்தில் சிக்குகிறது. விபத்து மற்றும் பஸ்சில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காரைக்குடி மண்டல போக்குவரத்து கழக சி.ஐ.டி.யூ., ஓய்வு பெற்றோர் நலச்சங்க துணைத் தலைவர் பரமாத்மா கூறியதாவது: ஒரு அரசு பஸ்சை பராமரிக்க டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் உட்பட 7க்கும் மேற்பட்டோர் பணியில் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் தற்போது அதில் பெருமளவு குறைந்து 3 பேருக்கு குறைவாகவே உள்ளனர். அரசு பஸ்களில் புதிதாக டிரைவர் நியமனம் செய்வதற்கு ஓட்டுநர் லைசென்ஸ் பெற்ற ஒருவர் குறைந்தது 90 நாட்கள் அரசு போக்குவரத்துக் கழக பயிற்சி பள்ளியில் முறையாக பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில வருடங்களாக முறையாக முழுமையான பயிற்சி பெற்ற டிரைவர்கள் நியமனம் செய்யாமல், ஓட்டுநர் லைசென்ஸ் வைத்துள்ள முறையான பயிற்சி பெறாத தற்காலிக டிரைவர்களை வைத்து பஸ்களை இயக்குவதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அரசு போக்குவரத்து கழகங்களிலேயே புதிய பஸ்களுக்கு பாடி கட்டப்பட்டு தரமான முறையில் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.தற்போது தனியாரிடம் புதிதாக பஸ்களுக்கு பாடி கட்டுவதினால் அங்கு தரமற்ற பொருட்களை கொண்டு பாடி கட்டுவதால் சிறிய விபத்து ஏற்பட்டாலே பஸ் முழு அளவில் சேதமடைந்து உயிர் பலி அதிகரித்து வருகிறது. அரசு இனிவரும் காலங்களில் டிரைவராக நியமனம் செய்யப்படுபவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து விபத்து இல்லாமல் ஓட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு பழுது ஏற்பட்ட பஸ்களை உடனடியாக தரமான உதிரி பாகங்களை கொண்டு பழுது நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
6 minutes ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago