| ADDED : டிச 02, 2025 04:21 AM
சிவகங்கை: ''தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் எதிரிகளை நண்பர்களாக்க மத்திய பா.ஜ., அரசு அதிகமான ரெய்டு நடத்த வாய்ப்புள்ளது,'' என, சிவகங்கையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கியிருப்பது மிக குறைவான தொகை. இதுபோன்ற விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கும்படி அரசாணையை மாற்ற வேண்டும். விபத்தில் காயமடைந்தவர்கள் அலைபேசி, அடையாள அட்டை, ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை தொலைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அவற்றை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பஸ்கள் முறையான பராமரிப்பில் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். போதிய ஊழியர்கள் உள்ளார்களா, இருக்கிற ஊழியர்களுக்கு அதிக பணிச்சுமை இந்த விபத்து நடக்க காரணமா என்பதை அரசு ஆய்வு செய்ய வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நெற்பயிர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீடுகள் இடிந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நிவாரணம் வழங்க வேண்டும். அரசியல் சாசனம் அடிப்படையில் கவர்னர் செயல்பட வேண்டும். தமிழக அரசுக்கு எதிராக கவர்னர் தனது அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி நிலவும். பா.ஜ.,வை தமிழகத்தில் எதிர்ப்பதற்காக தி.மு.க.,வுடன் கைகோர்த்துள்ளோம். ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கமாட்டோம். இ.டி., சி.பி.ஐ., உள்ளிட்டவைகளை வைத்து எதிரிகளை கூட நண்பர்களாக கொண்டுவர அதிக ரெய்டு தமிழகத்தில் நடக்க வாய்ப்பு உள்ளது என்றார்.