தேசிய வங்கிகளில் முன்னுரிமை கடனாக ரூ.8156 கோடி வழங்கல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் முன்னுரிமை கடனாக தேசிய வங்கிகள் மூலம் 6 மாதத்தில் மட்டும் ரூ.8,156 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவில் தேசிய வங்கிகளின் கீழ் 308 கிளைகள், ஏ.டி.எம்., மையங்கள் செயல்படுகின்றன. மானாவாரி, ஆற்று பாசனம் மூலம் இம்மாவட்டத்தில் ஒரு போக சாகுபடி செய்யப்படுகின்றன. இது தவிர கிணற்று பாசனம் மூலம் வெற்றிலை, நிலக்கடலை, வாழை, கரும்பு சாகுபடி நடக்கின்றன.இதன் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நோக்கில், அனைத்து தேசிய வங்கிகள் மட்டுமின்றி, கூட்டுறவு கடன் சங்கங்களும் கடன் வழங்குவதோடு, நகை அடமானத்தின் பேரிலும் விவசாயிகளுக்கு கடன் வழங்குகிறது. 2024 - ஏப்., முதல் 2025 மார்ச் வரையிலான ஒரு ஆண்டில் பயிர் கடனாக ரூ.13,053 கோடி வரை வழங்க இலக்கு நிர்ணயித்ததில், 2024 ஏப்., முதல் செப்., வரை 6 மாதத்தில் மட்டுமே 7,217 கோடி கடனும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துவங்க ரூ.1,437 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயித்ததில் 2024 ஏப்., முதல் செப்., வரை மட்டுமே 763 கோடி வரை கடனும் வழங்கியுள்ளனர்.அதே போன்று கல்வி கடன் கோரி வங்கிகளில் இது வரை 1,999 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக ரூ.26 கோடி வழங்க இலக்கு நிர்ணயித்ததில் 539 மாணவர்கள் ரூ.13.20 கோடி வரை கல்வி கடன் பெற்றுள்ளனர். இது மட்டுமின்றி வீடு கட்டும் கடன் உள்ளிட்ட முன்னுரிமை கடனாக 6 மாதங்களில் மட்டுமே சிவகங்கை மாவட்ட அளவில் ரூ.8,156 கோடி வரை கடன் வழங்கப்பட்டுள்ளது.