பைக் மீது லாரி மோதியதில் தம்பதி உட்பட மூவர் பலி
தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பைக்கில் சென்ற தம்பதி உள்ளிட்ட மூவர் லாரி மோதியதில் பரிதாபமாக பலியாயினர். சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள் செல்வபிரபு 50. மெட்டல் பாலீஷ் கடை நடத்தி வந்தார். அவரது மனைவி உஷா 40, மெடிக்கல் கடை நடத்தி வந்தார். சுரண்டை நகராட்சியில் காங்., கவுன்சிலராக இருந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சுரண்டை - சங்கரன் கோவில் ரோடு ரெட்டைகுளம் பகுதியில் இவர்களுக்கு தோட்டம் உள்ளது. அதில் தற்போது பூஞ்செடிகள் பயிரிடப் பட்டுள்ளன. நேற்று அதிகாலை அருள் செல்வபிரபு, உஷா மற்றும் மனைவியின் தங்கை பிளஸ்சி 35, ஆகியோர் பைக்கில் தோட்டத்திற்குச் சென்றனர். பூப்பறித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர். ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் பின்னால் வந்த காய்கறி லாரியின் முன்பகுதி டூவீலர் மீது மோதியது. இதனால் டூவீலர் தடுமாறி கவிழ்ந்தது. லாரியின் பின்புற டயர் மூவரின் மீதும் ஏறி இறங்கியது. அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி சம்பவயிடத்திலேயே பலியாயினர். சுரண்டை போலீசார் மூவரின் உடல்களையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி டிரைவர் குலையநேரியைச் சேர்ந்த குமார் 30, என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி உள்ளிட்ட மூவர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.