நீண்ட நாட்களுக்கு பின் 389 பேர் குடும்பத்தினருடன் இணைப்பு; மாநில மனநல சேவையில் தேனி இரண்டாமிடம்
தேனி: மாவட்டத்தில் மனப்பிறழ்வு ஏற்பட்டு உறவினர்கள் ஆதரவின்றி வீடு இன்றி ரோடுகளில் சுற்றித்திரித்த 389 பேரை மீட்டு, மனநல சிகிச்சை அளித்து குடும்பத்தினரின் இணைத்து வைத்துள்ளனர். மாவட்ட மனநல சிகிச்சை மையத்தின் சேவையால் பல ஆண்டுகளாக தமது குடும்பத்தினரை விட்டு பிரிந்து இருந்தவர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இச்சேவையால் மாநிலத்தில் தேனி மாவட்டம் 2ம் இடம் பிடித்துள்ளது. பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனையில் 50 படுக்கை வசதிகளுடன் அவசர தீவிர மீட்பு மற்றும் மனநல சிகிச்சை மையம் இயங்கியது. தற்போது இம் மையம் தேனி சமதர்மபுரத்தில் மாவட்ட மனநல சிகிச்சை, ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு 25 ஆண், 25 பெண் படுக்கை வசதிகளுடன் கூடிய மீட்பு மையமாக இயங்கி வருகிறது. இங்கு தற்போது 53 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 2019 முதல் தற்போது வரை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீடின்றி ரோடுகளில் மனப்பிறழ்வு பாதிப்பு ஏற்பட்டு உறவினர்கள், வாரிசுகளின் ஆதரவின்றி சுற்றித் திரிந்த 389 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு படிப்படியான 2 வார தீவிர மனநல சிகிச்சைக்கு பின் குணப்படுத்தி, முகவரி பெற்று குடும்பத்தினருடன் கிராம சுகாதார செவிலியர்கள் உதவியுடன் இணைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர பஸ் ஸ்டாண்ட், மக்கள் கூடும் இடங்கள், பொது இடங்களில் மனச்சிதைவு காரணமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் குறித்து வருவாய்த்துறை, போலீசார், இணை இயக்குனர், துணை இயக்குனர் பரிந்துரையில் 609 பேரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இடையூறு செய்பவர்களை மையத்திற்கு பிரத்தேயக ‛102' ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தி அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற நிலையில உள்ள 25 பேர், அரசு அங்கீகாரம் பெற்ற தங்கும் விடுதிகளுக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆதரவற்று நிலையில் விடுவது குற்றம் நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கலைச்செல்வி கூறியதாவது: ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார செவிலியர்கள் மூலம் முகவரிகள் கண்டறிந்து 389 பேரை குடும்பத்தினருடன் சேர்த்ததால் மாநில அளவில் தேனி 2ம் இடம் பெற்றுள்ளது. மாவட்ட மன நல டாக்டர் கோரா.ராஜேஷ். தலைமையிலான டாக்டர்கள், களப்பணியாளர்கள், நர்ஸ்கள், கிராம சுகாதார செவிலியர்கள் இப்பணிகளை மேற்கொண்டுள்ளனர். மனநல பாதிக்கப்பட்டவர்களை ஆதரவற்ற நிலையில் விடுவது உறவினர்கள், வாரிசுதாரர்களின் குற்றம். இதற்கு தண்டனை உண்டு.இதனை கண்டு பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என்றார்.